முதலீட்டில் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் சந்தையில் இருக்கும் ரிஸ்கை சமாளிக்கக் கட்டாயம் சில பாதுகாப்பான முதலீடுகள் அவசியம். அப்படி உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனத்திலிருந்து நம்ம வீடு வரையில் தங்கம் முக்கிய மற்றும் பாதுகாப்பான முதலீடாக உள்ளது.
தங்கம் விலை 10 கிராம் 24 கேரட் விலை 80000 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையில் இருக்கும் போது, இதன் மீதான முதலீட்டில் பெரிய அளவிலான லாபம் இனி வரும் காலத்தில் பார்க்க முடியாது என்றும், இதேவேளையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பது தான் தற்போதைய கள நிலவரம்.

இப்படியிருக்கும் வேளையில் பலர் வெள்ளி வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும் எனக் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் வெள்ளி விலை தொடர்ந்து உயருமா..? வெள்ளி விலை மீதான முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமான என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
இந்த ஆண்டு வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1 லட்சத்தைத் தொட்டு தற்போது 1.10 அளவீட்டையும் கடந்த ஒரு வாரத்தில் தாண்டியுள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வு, முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை பன்முகப்படுத்த முக்கிய தேர்வாக வெள்ளி மாறியுள்ளது.
வெள்ளி விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும், இன்னும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த 1-3 மாதங்களில் விலை சரிந்தால் வாங்குவது ஒரு நல்ல உத்தியாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர். ஒருவருடைய முதலீட்டுத் தொகுப்பில் 3-5% தொகையை வெள்ளிக்கு ஒதுக்குவது பாதுகாப்பான உத்தியாகவும், ஒட்டுமொத்த லாபத்தை அதிகரிக்கவும் உதவும்.
வெள்ளியின் விலை உயர்வு பல காரணங்களால் ஏற்பட்டுள்ளது. வெள்ளியை தங்கம் போல் நுகர்வது அதிகமாக நேரடியாக மக்கள் நுகர்வது கிடையாது. இதற்கு மாறாக தொழிற்துறையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளி உலோகம் எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் செமிகண்டக்டப் போன்ற துறைகளில் பயன்படுத்துவது அதிகரித்து வரும் காரணத்தால் அதன் டிமாண்ட் மற்றும் மதிப்பை அதிகரிக்கிறது. மேலும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அடுத்த கூட்டத்திலும் அதிகளவில் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் காரணத்தால் வெள்ளியின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வெள்ளி உலோகம் கிரீன் எனர்ஜி, கிளீன் எனர்ஜி துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகக் கடந்த 5 வருடத்தில் வெள்ளி விலை பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வருவார். டொனால்டு டிரம்ப் இயல்பாகவே சுற்றுச்சூழல் மீது அதிகம் ஆர்வம் காட்டுவது கிடையாது, பொருளாதாரத்தை வேகமாக வளர்க்கப் புதைபடிம எரிபொருளை அதிகம் பயன்படுத்துவதை நம்புபவர். எனவே டொனால்டு டிரம்ப் வெற்றி வெள்ளி விலையைப் பாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications