டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து தொழில்துறையினர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை சிஐஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சீவ் பூரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இலவச வர்த்தக ஒப்பந்தம், வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் சுற்றுலா துறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

என்டிடிவி பிராஃபிட்க்கு அளித்துள்ள பேட்டியில், உலக விநியோக சங்கிலியில் இந்தியாவின் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க இலவச வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வந்துள்ளன, தொழில்துறையும் இதைத்தான் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மை அற்றதாக இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கிறது எனவே இந்திய பொருளாதாரம் நல்ல வடிவத்தில் இருக்கிறது என கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு கொள்கைகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் பெட்ரோலியம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளையும் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பது தங்களது நீண்ட நாள் கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மூன்று அடுக்குகளாக குறைக்க வேண்டும் என்றும் , பல்வேறு கருவிகளுக்கான வரி விகிதங்கள் மற்றும் தற்போது இருக்கும் ஹோல்டிங் பீரியட் என்பதை ஒருங்கிணைப்பதன் மூலம் மூலதன ஆதாய வரிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வரியை குறைக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை ஆனால் அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் தங்குமிடம் தொடர்பான உள்கட்டமைப்புகளுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் இந்திய பொருளாதாரத்தில் இந்த துறைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதன் மூலம் சிறு சிறு தொழில்கள் உருவாவது மட்டுமின்றி சுய தொழிலுக்கான வாய்ப்புகளையும் இது அதிகமாக வழங்குகிறது. எனவே சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல கிராமப்புற பொருளாதாரத்தில் தனியார் மூலதன செலவினங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் சஞ்சீவ் பூரி தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications