நீண்ட காலமாக டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக சரிவு கண்டு வருகிறது. குறிப்பாக, 2014 டிசம்பர் 31ம் தேதி முதல் இதுவரையிலான காலத்தில் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 37 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அப்போது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 63.04ஆக இருந்தது. இன்று சுமார் ரூ.87.26 என்ற அளவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சின் வேகம் அதிகமாக இருந்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப வந்த பிறகு ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. கடந்த 10ம் தேதியன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 87.95ஆக சரிவடைந்தது. இந்த ஆண்டுக்குள் ரூபாய் மதிப்பு 90ஆக வீழ்ச்சி காணும் என சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதற்கு முக்கிய காரணம் உலக நிலவரங்கள்தான். நம்ம நாட்டு ரூபாய் மதிப்பு மட்டுமல்ல பல நாடுகளின் கரன்சி மதிப்பு குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி வரி விதிப்பு கொள்கையால் கடந்த சில மாதங்களாக டாலர் மதிப்பு வலுவடைந்தது. கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் 1,950 கோடி டாலரை திரும்ப எடுத்து சென்றனர்.அடுத்து நாட்டின் அதிக சரக்கு வர்த்தக பற்றாக்குறையும் ரூபாயின் மீது அழுத்தத்தை கொடுத்தது இது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு தற்போது கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு வர்த்தகத்தில் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் பல வழிகளில் உணர முடியும். சில சமயம் அது சாதகமாகவும், பல சமயங்களில் பாதகமாகவும் அமையும். வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் மாணவர்கள் டாலர்களை வாங்க அதிக ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கும். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். நிறுவனங்கள் அதனை வாடிக்கையாளர் தலையில் சுமத்தும் என்பதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுதவிர, பொருளாதாரத்தின் போட்டித்தன்மை, இறக்குமதி செலவு, வர்த்தக இருப்பு மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கம் பெரும கவலை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு காண்பது பணவீக்கத்தை அதிகரிக்கும். வட்டி விகிதத்தை நீண்ட காலத்துக்கு உயர்த்தப்படலாம். ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகளின்படி, ரூபாய் மதிப்பு 5 சதவீதம் வீழ்ச்சி கண்டால் சில்லரை விலை பணவீக்கம் 0.35 சதவீதம் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டால் ஒரே ஒரு தரப்பினர் மட்டும் பலன் அடைவார்கள். அவர்கள் வேறுயாருமல்ல ஏற்றுமதியாளர்கள்தான். மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ரூபாய் மதிப்பு சரிவு ஒரு மோசமான விஷயம். நாம் இறக்குமதியை சார்ந்த நாடாக இருப்பதால், நீண்ட காலத்துக்கு வலுவான நாணயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பு சரிவை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தனது அன்னிய செலாவணி கையிருப்பில் இருந்து 7,700 கோடி டாலரை செலவிட்டுள்ளது. 2024 அக்டோபர் 4ம் தேதியன்று ரிசர்வ் வங்கி வசம் 70,118 கோடி டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு இருந்தது. இது 2025 ஜனவரி 31ம் தேதியன்று 63,061 கோடி டாலராக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஓரளவுக்குதான் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ள முடியும் அதற்கு மேல் முயன்றால் அதன் நிதி நிலைமை மோசமாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications