தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பிரச்சனைகள் முதல் உள்நாட்டில் அதிகரித்துள்ள டிமாண்ட் வரை பல்வேறு காரணிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் வெள்ளி விலை உயர்ந்து வருகிறது.
2023ம் ஆண்டில், வெள்ளி விலை 7.19% உயர்ந்தது, அதே சமயத்தில் தங்கத்தின் விலை 13% உயர்ந்தது. 2024ம் ஆண்டு இதுவரையில் அதாவது ஏப்ரல் 8ம் தேதி வரையிலான காலத்தில் வெள்ளி விலை 11% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மறுபுறம், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 15% உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளி விலை நிலவரம் குறித்து நிதி சேவைகள் நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் கூறுகையில், "அடுத்த சில மாதங்களுக்கு வெள்ளி விலை தொடர்ந்து உயரும் நிலையில் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். மீடியம் டூ லாங் டர்ம் அடிப்படையில் வெள்ளி விலை 75,000 ரூபாய் வரையில் சரியும், அதிகப்படியாக 92000 ரூபாய் வரையில் உயரும்.
இக்காலகட்டத்தில் எப்போதெல்லாம் விலை குறைகிறதோ அப்போதெல்லாம் வெள்ளியில் முதலீடு செய்ய அறிவுறுத்துகிறோம். இதைத் தொடர்ந்து வெள்ளி விலை விரைவில் ரூ.1 லட்சம் என நிலைக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ம் தேதி வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.81,313 ஆக இருந்தது, அதே சமயத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.70,850 ஆக இருந்தது.
மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் தகவல்படி, 2020ம் ஆண்டிலிருந்து புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து சந்தையில் ரிஸ்க் அளவீடுகளை அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு முதலீட்டு சந்தைகளை பாதித்து, தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
2022ம் ஆண்டில் ரஷ்யா-உக்ரைன் போர், கடந்த ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ்-க்கு இடையிலான மோதல், இந்த பிரச்சனைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளைக் களைய முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான சொத்துக்கள் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த சில வருடத்தில் வெள்ளி விலையில் ஏற்பட்டு வரும் உயர்வுக்கு, தொழில்துறைத் துறையில் அதிகரித்து வரும் வெள்ளி உலோகத்தின் தேவையும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், சோலார் எனர்ஜி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் வெள்ளி உலோகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
உலக பொருளாதார மீட்சியும், உலக நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீது அதிகரித்து வரும் முதலீடும், தொழில்துறையில் வெள்ளியின் தேவை மற்றும் பயன்பாட்டை அதிகரித்துள்ளன. உலகளவில் பல்வேறு நாடுகளிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, சோலார் மின்சார செல்கள் எனப்படும் photovoltaic cell தயாரிப்பில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளி அமைப்பு (Silver Institute) வெளியிட்டுள்ள தகவல்படி, 2023ம் ஆண்டில் சோலார் மின்சார செல்கள் தயாரிப்பில் 161 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2022ம் ஆண்டை விட 140 மில்லியன் அவுன்ஸ் அதிகமாகும். இது, உலகளவில் வெள்ளி மொத்த தேவையில் சுமார் 13 சதவீதமாகும்.
புதுப்பிக்கத்தக்க எனர்ஜி துறையில் சோலார் மின்சாரம் முக்கிய பங்கு வகிப்பதால், வெள்ளி தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஆற்றல் நிறுவனம் (International Energy Agency) கூறுகையில் 2028ம் ஆண்டிற்குள், உலகளவில் மொத்த மின்சார உற்பத்தியில் சோலார் மின்சாரம் 13 சதவீத அளவீட்டை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது. 2023ம் ஆண்டில் இது 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கத்தக்க எனர்ஜி துறையில் மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த துறைகளில் வெள்ளி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, அண்மைக்கால வெள்ளி விலை உயர்வுக்கு, முதலீட்டு தேவை மட்டுமல்லாமல், தொழில்துறை தேவையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications