இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தங்கத்தில் முதலீடு செய்யப்படும் போது கிடைக்கும் அதே உணர்வுகளை தங்க பத்திரங்கள் மூலம் அளிக்க முடிவு செய்து வெளியிட்டவை தான் இந்த தங்க பத்திரம். 8 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று பல மடங்கு லாபத்தை அளித்து வருகிறது.
ஆர்பிஐ வெளியிட்ட 2017-18 சிரீயஸ் IX சவரன் தங்கப் பத்திரத்தின் (Sovereign Gold Bond) இறுதியாக மீட்கும் நாள் நவம்பர் 27, 2025 அன்று என ஆர்பிஐ அறிவித்துள்ளது. 2017 நவம்பர் 27-ல் வெளியிடப்பட்ட இந்தப் பத்திரம் சரியாக 8 ஆண்டுகள் முடிந்து தற்போது ஆர்பிஐ இதை திரும்ப பெற்றுக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு பணமாக கொடுக்க உள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் 20 முதல் 22 வரை விற்கப்பட்ட இந்தத் சிரீயஸ் IX பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.2,964 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.50 தள்ளுபடி இருந்ததால் அவர்கள் ரூ.2,914-க்கு வாங்கினர். இப்போது 2025 நவம்பர் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களின் சராசரி தங்க விலையின் அடிப்படையில் இந்த பத்திரத்தின் இறுதி மீட்பு விலை ரூ.12,484 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வாங்கியவர்களுக்கு முதலீடு செய்த ரூ.2,914 இப்போது ரூ.12,484 ஆக மாறியுள்ளது. இதனால் வட்டியைத் தவிர்த்து மூலதன லாபமாக மட்டும் ரூ.9,570 கிடைக்கிறது. இது முதலீட்டுத் தொகையில் 328.41 சதவீதம் என்று கணக்கிடப்படுகிறது. அதாவது நீங்கள் 1 லட்சம் ரூபாயை தங்க பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று இந்த தொகை 4.29 லட்சமாக உயர்ந்திருக்கும்.
வட்டியையும் சேர்த்தால் மொத்த லாபம் இன்னும் அதிகமாகும். இதனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பத்திரத்தை வாங்கியவர்கள் இப்போது பல மடங்கு பணம் பெறுகிறார்கள்.
சவரன் தங்கப் பத்திரத்தின் சிறப்பு என்ன?
சவரன் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது தங்கத்தை வாங்குவது போன்றது, அதவாது நீங்கள் ஒரு கிராம் தங்கத்தின் விலையின் அடிப்படையில் இப்பத்திரம் விற்கப்படும். தங்கத்தின் விலை உயரும் போது முதலீட்டுத் தொகையும் உயரும். கூடுதலாக ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் கிடைக்கும் என்பதால் இது பெரும் வாய்ப்பாக அமைந்தது.
தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதைப் போல திருட்டு பயம் இல்லை, பூட்டு வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. வருமான வரி விதிப்பும் மூலதன லாபத்துக்கு இல்லை என்பதால் இது மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
2017-ல் சவரன் தங்கப் பத்திரம் வாங்கியவர்கள் இப்போது ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.12,484 பெறுகிறார்கள். 8 ஆண்டுகளில் 329 சதவீத லாபம் என்பது சாமானிய மக்களுக்கும் பெரிய ஆச்சரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications