தங்கம் என்றாலே நகைகளாக தான் வாங்க வேண்டும் என இருந்த இந்தியர்களின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த ஒரு திட்டம்தான் தங்க பத்திர திட்டம். கடந்த 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிவித்தது .
இதன்படி ரிசர்வ் வங்கி வாயிலாக ஆண்டுக்கு நான்கு முறை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக தங்க பத்திரங்கள் வெளியிடப்பட்டன . இவற்றில் ஒரு கிராம் என்பது ஒரு யூனிட் ஆக கணக்கிடப்பட்டு ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு என பத்திரம் வெளியிடப்பட்டது . பொதுமக்கள் இந்த தங்க பத்திரத்தை பணம் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பத்திரம் முதிர்வு பெறும் அந்த நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவோ அந்த பணமும் நீங்கள் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்தது.

தங்கத்தில் முதலீடு செய்து சிறந்த லாபம் பார்க்க வேண்டும் என காத்திருந்த பலருக்கும் தங்க பத்திர திட்டங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தன. அந்த வகையில் 2017- 2018 ஆம் நிதி ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நான்காவது கட்ட தங்க பத்திரங்கள் அக்டோபர் 23ஆம் தேதி ஆன இன்று முதிர்வு பெறுகின்றன. இதில் ஒரு கிராமுக்கு 12 ,707 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதாவது அக்டோபர் 17 ,அக்டோபர் 20, அக்டோபர் 22 ஆகிய மூன்று நாட்களிலும் 24 கேரட் தங்கத்தின் விலை சராசரியாக கணக்கீடு செய்து ஒரு யூனிட்டுக்கு 12,704 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அன்று தங்க பத்திரத்தில் ஒரு கிராமுக்கு வெறும் 2,987 ரூபாயை முதலீடு செய்த பலரும் இன்று அதற்கு பதிலாக 12,704 ரூபாயை திரும்ப பெறுகின்றனர்.

அதாவது 8 ஆண்டுகளில் இவர்களின் முதலீடு 325 சதவீத லாபத்தை ஈட்டி தந்துள்ளது . 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தவர்கள் தற்போது அதனை 4.25 லட்சம் ரூபாயாக திரும்ப பெறுகின்றனர் . இது தவிர அவர்கள் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் சேர்ந்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியும் கிடையாது என்பதால் லாபம் முழுவதுமே முதலீட்டாளரின் கைகளுக்கு வருகிறது . அந்த வகையில் இந்தியாவில் மிகச்சிறந்த ஒரு தங்க முதலீடு திட்டமாக தங்க பத்திரத் திட்டங்கள் மாறி இருக்கின்றன. நகையாக வாங்கி இருந்தாலும் செய்கூலி சேதாரம் உள்ளிட்ட இழப்பு ஏற்பட்டிருக்கும், ஈடிஎஃப் முதலீடுகள் என்றால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ உள்ளிட்டவற்றில் இழப்பு ஏற்பட்டிருக்கும் ஆனால் இதில் மட்டும் தான் நாம் செய்த முதலீடு லாபமாக நம் கைகளுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications