மோடி அரசு போட்ட தப்பு கணக்கு.. அரசு கஜானாவை காலி செய்ய போகும் Sovereign Gold Bond திட்டம்..?

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி மிகவும் சொற்பமான அளவிலே உள்ளது. அதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியால் அன்னிய செலாவணி அதிகளவில் வெளியேறுகிறது. மேலும், தங்கம் இறக்குமதியால் அரசுக்கு எந்த பலனும் இல்லை. இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக பத்திரங்களாக மக்களை வாங்க செய்தால் இறக்குமதியை குறைக்கலாமே என்ற எண்ணத்தில், 2015ல் தங்க பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. மக்கள் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளாக வாங்குவதற்கு பதிலாக தஙக பத்திரங்களில் முதலீடு செய்ய மக்களை ஊக்குவித்தது. ஆண்டுக்கு 2.75 சதவீதம் வட்டி கொடுப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் தங்க பத்திரங்கள் திட்டத்துக்கு மக்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

அதேசமயம், மக்கள் தங்க நகைகள், நாணயங்களை வாங்குவதை தொடர்ந்தனர். இதனால் தங்க பத்திரங்கள் திட்டம் தொடங்கி பத்து ஆண்டுகள் ஆனபிறகும், இறக்குமதியை குறைப்பது என்ற அதன் முக்கிய நோக்கத்தை எட்ட முடியவில்லை. நம் நாடு இன்னும் உலகின் முன்னணி தங்க இறக்குமதியாளர்களில ஒருவராகதான் உள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நம் நாடு 4,900 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும். தங்க பத்திர திட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும், இந்தியாவின் சராசரி ஆண்டு தங்க இறக்குமதி 3,700 கோடி டாலராகவே இருந்தது.

மோடி அரசு போட்ட தப்பு கணக்கு.. அரசு கஜானாவை காலி செய்ய போகும் Sovereign Gold Bond திட்டம்..?

வரியை அதிகரித்தால் தங்கம் இறக்குமதி குறையும் என்ற நினைப்பில் மத்திய அரசு 2022ம் ஆண்டில் தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை அதிரடியாக 15 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் நினைத்தற்கு மாறாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவது தங்கத்தின் விலையை மேலும் அதிகரித்தது அடுத்து கடத்தல் தங்கம் வரத்து அதிகரித்தது. இந்த எதிர்மறைகளை உணர்ந்து 2023ல் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. ஆனால் அதற்குள் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இத்தகைய நிலையற்ற செயல்பாடுகள் தங்க பத்திர திட்டத்தை பலவீனப்படுத்தியது.

தங்க பத்திரம் திட்டம் தனது முக்கிய நோக்கமான இறக்குமதியை கட்டுப்படுத்தவில்லை என்பது கூட இப்போது ஒரு பிரச்சினை இல்லை. தங்கம் பத்திரம் தொடர்பாக எழுந்துள்ள மற்றொரு பெரிய சவாலை மோடி அரசாங்கம் எப்படி எதிர்கொள்ள போகிறது என்று என்று நினைத்தால் நமக்கே கலக்கம் ஏற்படும். 2015 நவம்பரில் முதல் தங்க பத்திரம் வெளியிட்டபோது, 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,500ஆக இருந்தது. ஆனால் இன்று அது கிராமுக்கு ரூ.9,000ஐ தாண்டி விட்டது. தங்கத்தின் விலை 3.5 மடங்குக்கு மேல் உயர்ந்து விட்டது. இதே காலத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,150 டாலரிலிருந்து 3,000 டாலரை தாண்டி விட்டது.

மத்திய அரசு தங்க பத்திரத்தை வெளியிட்டபோது, தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயரும் என்று நினைத்து பார்த்து இருக்காது. இப்போது முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தர வேண்டிய நேரம் வரும்போது, மத்திய அரசு அவர்கள் முதலீடு செய்த தொகையை காட்டிலும் பல மடங்கு அதிகமாக பணத்தை திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கும். இது மத்திய அரசின் கஜானாவை பாதிக்கும். இதுவரை மத்திய அரசாங்கம் மொத்தம் 147 டன் தங்கத்துக்கு சமமான தங்க பத்திரங்களை 67 முறை வெளியிட்டுள்ளது. தற்போது அரசாங்கத்தின் பொறுப்புகள் 132 டன்னை எட்டியுள்ளது. இந்த பத்திரங்களை 2032ம் ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதனால் வரும் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு பெரிய நிதி அழுத்தம் இருக்கும்.

தங்க பத்திர திட்டத்தால் மத்திய அரசு மட்டுமல்ல இந்திய ரிசர்வ் வங்கியும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தனது கைவசம் 879 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. இது நாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பில் 11.5 சதவீதமாகும். இது இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். தங்க பத்திர திட்டத்தின் காரணமாக மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் நிதி அழுத்தத்தில் உள்ளன என்பதை இது காட்டுகிறது. 2023-24ம் நிதியாண்டில் தங்க பத்திர வெளியீடு வாயிலாக மத்திய அரசு ரூ.27,000 கோடியை திரட்டியது. நடப்பு 2024-25ம் நிதியாண்டில் எந்த புதிய தங்க பத்திர வெளியீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அதிகரித்து வரும் பொறுப்பு மற்றும் நிதி அழுத்தம் காரணமாக இந்த திட்டத்தை மத்திய அரசால் தொடர முடியாது என்பது தெரியவந்துள்ளது.

தங்க பத்திர திட்டம் காகிதத்தில் நன்றாக தெரிந்தது, ஆனால் உண்மையில் அது அரசாங்கத்துக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டமாக மாறி விட்டது. அதேசமயம் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் 3 மடங்குக்கும் அதிகமான வருமானத்தை பெற்றனர். ஆனால் அரசாங்கத்தின் நிதி நிலை மோசமடைந்தது. தற்போது மத்திய அரசை பொறுத்தவரை தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பாக தங்க பத்திரம் உள்ளது. நம்மவர்களின் தங்கத்தின் மீதான ஆர்வத்தை மத்திய அரசு தவறாக கணித்து விட்டது, அதுவே அதன் மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது.

பொதுவாக பெண்கள் நகைகள் அணிவதே மிகவும் விரும்புவார்கள். இது அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி கொஞ்சம் கூட மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே தங்க நகைகளுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அடுத்தது, முதலீடு நோக்கதிலும் தங்கத்தை மக்கள் வாங்குகிறார்கள். அவசரமான மற்றும் நெருக்கடியான சமயங்களில் தங்கத்தை வைத்து அடமானம் வைத்து பணம் வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணமும் மக்கள் தங்கத்தை தயக்கம் இன்றி தொடர்ந்து வாங்கி சேமிக்கின்றனர். எனவே தங்கத்துக்கான தேவை தொடர்ந்து இருந்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் இறக்குமதியும் தொடரத்தான் செய்யும்.

தற்போது தங்கம் இறக்குமதியை குறைக்க ஒரே வழித்தான் இருக்கிறது. பிரபல தொழிலதிபர் அனில் அகர்வால் சொன்னது போல், பயன்படுத்தாத தங்க படிமங்களை தோண்டி தங்க உற்பத்தி செய்வதுதான் அந்த வழி. நம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு பயன்படுத்தப்படாத தங்க படிமங்கள் இருந்தாலும், ஒழுங்குமுறை தடைகள், உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் கடந்த கால கொள்கைத் தடைகள் போன்ற காரணங்களால் தங்க உற்பத்தி மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+