மத்திய பட்ஜெட் 2026இல் சவரின் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bonds - SGB) மீதான வரி விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை பலர் வரி விலக்கு பெற்று தங்க முதலீடாகக் கொண்டாடிய SGB-களில், இரண்டாம் சந்தையில் வாங்குபவர்களுக்கு இனி மூலதன லாப வரி (Capital Gains Tax) விதிக்கப்படும். ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
இந்தப் புதிய விதிப்படி, சவரின் கோல்ட் பாண்டை ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) நேரடியாக ஆரம்ப வெளியீட்டில் (Original Issue) வாங்கி, முதிர்ச்சி அடையும் வரை வைத்திருந்தால் மட்டுமே மூலதன லாப வரி விலக்கு சலுகை கிடைக்கும்.

இரண்டாம் சந்தையில் (Secondary Market) அதாவது ஒரு தனிநபரிடமிருந்து மற்றொருவர் வாங்கியிருந்தால் இந்த வரி சலுகை பொருந்தாது. இந்த மாற்றம் அனைத்து SGB வெளியீடுகளுக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும்.
முன்பு, பிரிவு 70(1)(x)ன் கீழ், முதிர்ச்சி அடைந்து பணம் பெறும் அனைவருக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டது. இப்போது அந்த சலுகை ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாக வாங்கியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் சந்தையில் SGB வாங்குபவர்கள் பெரும்பாலும் விலை ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் அல்லது உடனடி பணத் தேவைக்காக வாங்குபவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாங்கிய விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு இனி வரி செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு கூடுதல் வரி சுமையை ஏற்படுத்தும்.
எளிய மக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், நீங்கள் SGB-ஐ ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாக வாங்கி பல ஆண்டுகள் வைத்திருந்தால் வரி இல்லாமல் முழு லாபத்தையும் பெறலாம்.
ஆனால் இரண்டாம் சந்தையில் வாங்கினால் விற்கும் போது லாபத்துக்கு வரி கட்ட வேண்டும். இது குறுகிய கால அல்லது நீண்ட கால மூலதன லாப வரியாக (STCG அல்லது LTCG) வசூலிக்கப்படும்.
மாற்றத்தின் நோக்கம் என்ன?
அரசு இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கான முக்கிய காரணம், வரி சலுகையை உண்மையான நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்பதுதான். இரண்டாம் சந்தை பரிவர்த்தனைகளில் வரி விலக்கு சலுகை தவறுதலாக விரிவடைவதைத் தடுப்பதே இதன் நோக்கம். இதன்மூலம் உண்மையான தங்க முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
SGB-ஐ பாதுகாப்பான தங்க முதலீடாகக் கருதுபவர்கள், புதிய SGB பத்திரங்கள் வெளியிடப்பட்டால் ரிசர்வ் வங்கியின் ஆரம்ப வெளியீட்டில் நேரடியாக வாங்குவது நல்லது. அப்படி வாங்கினால் முதிர்ச்சி அடையும் போது வரி இல்லாமல் முழு லாபத்தையும் பெற முடியும். இரண்டாம் சந்தையில் வாங்குபவர்கள் விற்கும் போது வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த மாற்றம் தங்கத்தை நீண்டகால முதலீடாகப் பார்க்கும் பொதுமக்களுக்கு சாதகமாக அமையும். அதே சமயத்தில், இரண்டாம் சந்தையில் விலை வேறுபாட்டைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி சுமை ஏற்படும். பட்ஜெட் 2026இல் அறிவிக்கப்பட்ட இந்த விதி மாற்றம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது. SGB-ஐ இன்னும் பாதுகாப்பான மற்றும் நேர்மையான முதலீட்டு வழியாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications