மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், டிசம்பர் 21 அன்று ஜெய்சால்மர்-ல் நடைபெற உள்ளது. முதலில் இக்கூட்டம் நவம்பர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தால் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் இதற்கு முன்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பிரிந்துரைகள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பீகார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவை குழு புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள் மீது 'ஸ்பெஷல் ஜிஎஸ்டி விகிதம்' 35% ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் ஆயத்த ஆடைகள் அதாவது ரெடிமேட் ஆடைகள் மீதும் ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையின் கீழ் ரூ.1,500 வரை விலையுள்ள ரெடிமேட் ஆடைகள் மீது 5% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம். ரூ.1,500-ரூ.10,000 வரையிலான ரெடிமேட் ஆடைகள் மீது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம். ரூ.10,000-க்கும் அதிகமான ரெடிமேட் ஆடைகள் மீது 28% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என பரிந்துரை செய்துள்ளது.
மேலும், அழகுசாதனப் பொருட்கள், கடிகாரங்கள், காலணிகள், ஹேண்ட்பேக் போன்ற லைப்ஸ்டைல் பொருட்களின் விலை அடிப்படையில் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த்தும் யோசனையை பரிந்துரை செய்துள்ளது. அதாவது ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட விலை வரம்பு போலவே இந்த லைப்ஸ்டைல் பொருட்களின் விலைக்கு ஏற்ப ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு இது நடைமுறைக்கு வருமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது விரைவில் தெரியும்.
இந்த 3 பரிந்துரைகளும் நடைமுறைக்கு வந்தால் புகையிலை மற்றும் குளிர்பானங்களின் விலை உயரும். ஆடைகள், கடிகாரங்கள், காலணிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் விலையிலும் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் நுகர்வோருக்கு அதிக செலவை ஏற்படுத்தும், மேலும் தொழில்துறையிலும் அதன் தாக்கம் இருக்கும்.


Click it and Unblock the Notifications