அண்மை காலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது, ஆனால் வரும் மாதங்களில் தங்கத்தின் விலை இந்த அளவிற்கு உயர்வு காணாது என நிபுணர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை அன்று நிலவரத்தின்படி சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 0. 32 சதவீதம் உயர்ந்து 2649.87 அமெரிக்க டாலர்கள் என வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் 29.47 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 12.69 சதவீதம் உயர்ந்துள்ளது . அதுவே கடந்த 30 நாட்கள் என கணக்கீடு செய்யும் போது தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 3.69 சதவீதம் குறைந்துள்ளது.

இது மாதாந்திர அடிப்படையில் பார்க்கும்போது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தங்கத்தின் விலை இந்த அளவு சரிவடைவது இதுவே முதல்முறை என சர்வதேச பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்ற செய்தியை தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது எனவே தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நவம்பர் மாதத்தினை பொறுத்தவரை டாலர் இன்டெக்ஸ் 2 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக நிலவிய ஒரு குழப்பமான சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவக்கூடிய பதற்றம், ரஷ்யா உக்ரைன் போர் ஆகியவை காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த ஓராண்டு காலமாகவே தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருகிறது. இது இந்தியாவிலும் மிக வலுவாக எதிரொலித்தது.
நவம்பர் 30ஆம் தேதி நிலவரத்தின் படி சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 7150 ரூபாய் எனவும் 24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 7800 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை சரிவடைந்து வருவதாக ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜிகர் திரிவேதி தெரிவிக்கிறார்.
பொதுவாகவே பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சமயங்களிலும், வர்த்தக போர் நடைபெறும் போதும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களும் பல்வேறு நாடுகளின் அரசுகளும் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். இதுதான் கடந்த ஓராண்டு காலமாக தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது ட்ரம்ப் வெற்றியைத் தொடர்ந்து இந்த பதற்றங்களுக்கு முடிவு வரப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் தொழில்துறை முன்னேற்றத்திற்கு டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. அது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது சற்றே போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறது என்கிறார் கேடியா கமாடிட்டிஸ் நிறுவனத்தின் இயக்குனர் அஜய் கேடியா.
அடுத்த வாரம் அமெரிக்க அரசு சார்பாக அந்நாட்டு பொருளாதார தரவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த வாரத்திற்கு பிறகு தங்கத்தின் விலை எந்த போக்கில் இருக்கும் என்பதை கணித்து விட முடியும் என முதலீட்டு துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications