முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒரு வேலை கிடைத்து விடாதா? என ஏங்கும் நபர்களுக்கு மத்தியில் ஜென்பேக்ட், டிசிஎஸ் மற்றும் அக்சென்ச்சர் போன்ற முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிய பெண்.. அந்த வேலையை விட்டுவிட்டு சுய தொழில் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் செய்த முதலீடு வெறும் ரூ.11,000 மட்டுமே. இதிலிருந்தே மாதம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஸ்ருதி குந்தன் என்ற குருகிராமைச் சேர்ந்த பெண் 7 ஆண்டுகள் வரையில் கார்ப்பரேட் வேலையில் இருந்தார். பின்னர் 2023-ஆம் ஆண்டில் தன்னுடைய வீட்டில் இருந்தே போஹோலெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். 2017-ஆம் ஆண்டு ஜென்பேக்ட் நிறுவனத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கி.. 2019-ஆம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்துவிட்டு பின்னர் டிசிஎஸ் நிறுவனத்திலும் அதன் பின்னர் அக்சென்ச்சர் நிறுவனத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

தன்னுடைய கணவர் பிரணவ் ஸ்ரீ கொடுத்த மோட்டிவேஷன் காரணமாக சுய தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்பத்தில் மெழுகுவர்த்தி தயார் செய்து விற்பனை செய்து வந்தார். லட்டு வடிவிலான மெழுகுவர்த்திகள் தொடங்கி பல புதுமையான வடிவங்களில் கைமுறையாக மெழுகுவர்த்தி தயாரித்தார். ஆரம்பக் கட்டத்தில் துபாய்க்கு அனுப்புவதற்காக 7000 மெழுகுவர்த்திகள் தயார் செய்தார். இதுதான் அவருக்கு கிடைத்த பெரிய ஆர்டர்.
மாறிய பாதை: மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஈடுபடும் போது சின்ன சின்ன தொழில் முனைவோருக்கு இருக்கும் பிரச்சனையை சுருதி கண்டறிந்தார். அதாவது சிறு வணிகர்கள் மற்றும் டிடுசி பிராண்டுகள் பேக்கேஜிங் பொருட்கள் இல்லாமல் சிரமப்படுவதை பார்த்தார். பெரிய பேக்கேஜிங் நிறுவனங்கள் அதிக அளவிலான ஆர்டர்களை மட்டுமே வாங்கி செய்து கொடுக்கின்றன. ஆனால் சின்ன பிசினஸ் செய்பவர்கள் தரமான பேக்கேஜிங் பொருட்கள் இன்றி தவிப்பதை பார்த்து அவர்களுக்கு பேக்கேஜிங் மெட்டீரியல்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.
இதுவே ஸ்ருதியின் தொழிலுக்கு அடித்தளமாக அமைந்தது. நிரந்தரமாக கார்ப்பரேட் சம்பளத்தை விட்டு விட்டு தொழில் தொடங்குவது ஸ்ருதிக்கு அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. ஆரம்பகட்டத்தில் நீண்ட நேரம் உழைத்து, தூக்கம் இல்லாமல் பல இரவுகளை கடந்துள்ளார்.கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததால் ஆரம்பகட்ட பிரச்சனைகளை எளிதாக சமாளித்துள்ளார்.
ஆரம்பத்தில் மெழுகுவர்த்தி தயாரிப்பில் தொடங்கிய அவருடைய நிறுவனம் படிப்படியாக பேக்கேஜிங் தயாரிப்பு நிறுவனமாக மாறியது. தற்போது குருகுராமில் 1200 சதுர அடி இடத்தில் வேர் ஹவுஸ் அமைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டில் போஹோலெட் நிறுவனம் சுமார் 2,804 பேக்கேஜிங் ஆர்டர்களைப் பெற்று ரூ.38 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளது. ஒரு சில மாதங்களில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை சுருதி விற்பனை செய்து செய்கிறார். அதுவே பண்டிகை காலமாக இருந்தால் மாதத்திற்கு ரூ. 10 முதல் ரூ. 11 லட்சம் வரை வருமானம் பார்க்கிறார்.
தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் 2026-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் ரூ.8.56 லட்சத்தை சுருதி முதலீடு செய்துள்ளார். பேக்கேஜிங் பாக்ஸ்களை தங்கள் நிறுவனத்தில் தயாரிப்பதற்காக ரூ. 6.5 லட்சம் மதிப்பிலான செமி ஆட்டோமேட்டிக் பஞ்சிங் மெஷின் வாங்கியுள்ளார். இந்த முதலீடுகள் யாவும் அவருடைய நிறுவனம் கொஞ்சம் வளர்ந்த பிறகு செய்யப்பட்டவை.
ஆரம்பத்தில் ஸ்ருதி தனது தொழிலுக்காக செய்த முதலீடு 11,000 ரூபாய் மட்டுமே. இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. திறமையை வீட்டிற்குள் முடக்கி வைக்காமல், தொழிலுக்கு பெரிய முதலீடு தேவை என்று காத்திருக்காமல், துணிச்சலோடு இறங்கினால் இத்தகைய வெற்றி சாத்தியமே!


Click it and Unblock the Notifications
