ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் நடக்கப்போகிறது என்பதைத் தாண்டி அன்று மாலை வெளியாகும் எக்சிட் போல் தான் பலரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இந்த தேர்தலில் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என பிஜேபி கட்சியினர் கனவு காணுவதை விடவும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். காரணம் மோடி தலைமையிலான பிஜேபி தோல்வியைச் சந்தித்தால் பங்குச்சந்தை 30 சதவீதம் வரையில் சரியும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் சந்தை ஆய்வாளர்களின் கணக்கெடுப்பின்படி, இந்தியப் பங்குச்சந்தைகள் தங்களுடைய பங்கு முதலீட்டின் வளர்ச்சி தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டுமெனில் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி 303 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என கணித்துள்ளது.
இப்படி மோடியின் கட்சி எவ்வளவு சீட்டுகளில் வெற்றிபெற்றால், எவ்வளவு வளர்ச்சி அடையும், சரியும் என்பதை 32 அசர்ட் மேனேஜர்ஸ், டீலர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் இந்த ஆய்வின் முடிவில் மோடியின் வெற்றியும், தோல்வியும், பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பையும் அதிகம் பாதிக்கும் என கணித்துள்ளனர்.
Stock market reaction: மோடி தலைமையிலான கூட்டணி 272 சீட்டுகளுக்கு குறைவான இடத்தில் வெற்றிப்பெற்றால் பங்குச்சந்தை 10 சதவீதம் வரையில் சரியும்.
272 இடங்களுக்கு அதிகமாகவும், 303 இடங்களுக்குக் குறைவாகவும் வெற்றிபெற்றால் 2 சதவீதம் வரையில் குறையும்.
இதுவே 303 சீட்டுகளுக்கு அதிகமாக இடத்தில் மோடி தலைமையிலான NDA கூட்டணி வெற்றிபெற்றால் பங்குச்சந்தை 4 சதவீதம் வரையில் உயரும்.
பல பிஜேபி தலைவர்கள் கூறியது போல் மோடி தலைமையிலான NDA கூட்டணி 400 சீட்டுகளில் வெற்றிபெற்றால் நிஃப்டி 8 சதவீதம் வரையில் உயரும் என ப்ளூம்பெர்க் செய்த கள ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய பணி: மோடி இந்த தேர்தலில் வெற்றிபெற்றாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் கொள்கையில் கடுமையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கான அவசியம் உள்ளது.
போட்டி அதிகரிப்பு: முதலீட்டாளர்கள் மோடியை மூன்றாவது முறையாக வெற்றிபெறுவதை ஆதரிக்கும் அதே வேளையில், ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல்கள் தொடங்கியதில் இருந்து, சில பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு மற்றும் இந்தியா BLOC- NDA மத்தியிலான நெருக்கமான போட்டிகள் பற்றிய அறிக்கைகள் பங்குச்சந்தையில் நேரடியாக எதிரொலித்துள்ளது.
Sensex & Nifty: சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு மாதத்தில் வெறும் 0.03 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி 50 குறியீடு வெறும் 0.44 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு: மேலும் மோடி தலைமையிலான அரசு சிறிய அளவிலான மெஜாரிட்டியில் வெற்றிபெற்றால் ரூபாய் மதிப்பு கணிசமாக குறையும் என 47 சதவீதம் பேரும், மோசமாகச் சரியும் என 9 சதவீதம் பேரும், சிறிய அளவிலான சரிவு இருக்கும் என 44 சதவீதம் பேரும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
பத்திர சந்தை: இதேபோல் மோடி தலைமையிலான அரசு சிறிய அளவிலான மெஜாரிட்டியில் வெற்றிபெற்றால் பத்திர முதலீட்டின் லாப அளவு கணிசமாக உயரும் என 53 சதவீதம் பேரும், பெரிய அளவில் உயரும் என 6 சதவீதம் பேரும், சிறிய அளவில் உயரும் என 41 சதவீதம் பேரும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications