இந்திய பங்குச் சந்தை சர்வதேச சந்தையின் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக அதிகப்படியான சரிவை சந்தித்து வரும் வேளையில், இந்த வாரம் கடுமையான சரிவை பதிவு செய்துள்ளது. இப்படியிருக்கும் வேளையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு முக்கிய குறியீடுகளும் கிட்டத்தட்ட தலா 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. இதை தொடர்ந்து மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் குறியீடுகள் 3 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 12 மணியளவில் 628.27 புள்ளிகள் சரிந்து 79,429 புள்ளிகளை அடைந்து நீண்ட நாட்களுக்கு பின்பு 80000 புள்ளிகள் அளவீட்டை இழந்துள்ளது. இன்று சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 79,356.47 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 24,113.05 புள்ளிகளை தொட்டு உள்ளது.
இதன் காரணமாக BSE இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் நேற்றைய வர்த்தக முடிவில் கிட்டத்தட்ட ரூ.444 லட்சம் கோடியிலிருந்து இன்று ரூ.435 லட்சம் கோடியாக சரிந்தது, முதலீட்டாளர்கள் ஒரே அமர்வில் சுமார் ரூ.9 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இன்றைய வர்த்தக முடிவில் இழப்பின் மொத்த விபரம் தெரிய வரும்.
சென்செக்ஸ் குறியீடு 80,187.34 புள்ளிகளில் துவங்கி 79,356.47 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. மேலும் இன்று இந்தியா VIX குறியீடு, 7% க்கும் அதிகமாக உயர்ந்து, சந்தையின் நிச்சயமற்ற தன்மையை காட்டுகிறது.
நிஃப்டி 50 கடந்த ஐந்து தொடர்ச்சியான அமர்வுகளில் சரிவு போக்கில் உள்ளது. செப்டம்பர் 27 அன்று பதிவு செய்ப்பட்ட 26,277.35 புள்ளிகள் என்ற உச்ச அளவில் இருந்து சுமார் 8% க்கும் அதிகமாக இழந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 1.05 சதவீதம் சரிந்துள்ளது, நிஃப்டி 50 குறியீடு 24,418.05 புள்ளிகளில் துவங்கி 24,113.05 புள்ளிகளை அடைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார அச்சங்கள், வட்டி விகிதங்கள் உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணிகளின் கலவையால் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பெரும் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications