திருமணமான பெண்கள் வீட்டில் 500 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம், இதற்கு எவ்விதமான கணக்கும் காட்ட தேவையில்லை என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறு என உச்ச நீதிமன்றம் விளக்கம் கொடுத்துள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், திருமணமான பெண்கள் தங்க வீட்டில் 500 கிராம் வரையிலான தங்கம் நகைகளும், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் வரையிலான தங்கம் நகைகளும், ஆண்கள் 100 கிராம் வரையிலும் வைத்திருந்தால் வருமான வரித்துறை சோதனை செய்யப்படும் போது அவை பறிமுதல் செய்யப்படாது.

மேலும் அந்த நபரின் வருமான அளவு குறைவாக இருந்தாலும் தங்கம் பறிமுதல் செய்யப்படாது என தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கான முழுமையான பொருள், வீட்டில் இருக்கும் தங்கத்திற்கு உரிய விளக்கம் கொடுத்தால் 500 கிராம் வரையிலான தங்கத்தை பறிமுதல் செய்யப்படுவதில் இருந்து தடுக்கலாம்.
ஆனால் 500 கிராம் தங்கத்திற்கு வருமான வரித்துறையிடம் கணக்கு காட்ட தேவையில்லை என பரவலான கருத்து நிலவி வருகிறது. சுப்ரீம் கோர்ட் இந்த அறிவிப்புக்கான விளக்கம் கொடுக்க முக்கியமான காரணம் பீகார் அரசுக்கும் புல்பரி குமாரிக்கும் மத்தியில் நடக்கும் வழக்கு தான்.
முக்கிய வழக்கு
பீகார் அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு, ஃபுல்பரி குமாரி மற்றும் அவரது கணவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைக் குவித்ததாக 2015ல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஃபுல்பரி குமாரி வருமான வரித்துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பதாக கூறினார்.
இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட பாட்னா உயர் நீதிமன்றம், 2026 மே 14 அன்று ஃபுல்பரி குமாரி மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு செய்ய மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் என அனுமதிப்பது, தங்கம் எங்கிருந்து வந்தது, இதற்கான நிதி ஆதாரம் காட்ட அவசியமில்லை என்பதற்கான பொருள் அல்ல.
இதேபோல் வருமானத்திற்குப் பொருந்தாத சொத்துகள் வைத்திருப்பது குற்றச்செயல், இதில் வருமான வரித்துறையின் அறிவிப்பு யாரையும் காப்பாற்றாது என கூறி 2026ல் நவம்பர் 2ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை மீண்டும் தொடர பீகார் அரசு ஊழல் தடுப்புப் பிரிவு உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
என்ன தீர்வு..?
எனவே வீட்டில் அதிகமாக தங்கம் வைத்திருப்பவர்கள், நகைகளை வாங்கியதற்கான பில், பேமெண்ட் தரவுகள், பரிசாக வந்திருந்தால் அதற்கான தரவுகள், திருமணத்திற்காக கொடுக்கப்பட்டு இருந்தால் அதற்கான புகைப்படம், பரம்பரையாக வந்திருந்தால் அதற்கான உயில் ஆவணம் போன்றவற்றை வைத்திருப்பது அவசியம்.
இதேபோல் அனைத்து நகைகளுக்கும் ஆவணம் வேண்டும் என்பது இல்லை, உங்களுடைய வருமானத்திற்கு இணையான தங்கம் கையில் இருக்கும் பட்சத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. இதேபோல் 500 கிராமுக்கு அதிகமான தங்கத்திற்கு போதுமான விளக்கம் கொடுத்தாலும் போதுமானது.


Click it and Unblock the Notifications