சமீபகாலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், இது மத்திய அரசின் நிதிநிலையை நேரடி சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, அரசு வெளியிட்டுள்ள தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds - SGB) மீதான அரசின் கடன் ரூ. 1.5 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள மொத்த தங்கப் பத்திரங்களின் அளவு 126 டன்கள் ஆகும். ஒரு டன் தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பை (ரூ.1,241 கோடி) கணக்கில் கொண்டால், இந்த அளவிலான கடன் அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் முதிர்வுக் காலத்தை நிறைவு செய்யாத கடைசி 58 SGB வெளியீடுகளின் சராசரி வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.4,227 ஆக இருந்தது. அரசு இந்த வெளியீட்டு விலையின் மீது ஆண்டுதோறும் 2.5% வட்டி செலுத்தி வருவதால், தற்போதுள்ள தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது, அரசின் கடன் சுமார் 200% அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் சேகர் பண்டாரி பேசுகையில், "உயர்ந்து வரும் தங்க விலையால் SGB-கள் மூலம் மத்திய அரசுக்கு குறிப்பிடத்தக்க கடன் ஏற்பட்டுள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 6,664 கோடியாக இருந்த இந்த கடன், தற்போது 930% அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார். இந்த விலை உயர்வு இருந்தபோதிலும், முதிர்வு காலத்திற்கு முன்பாகவே தங்கப் பத்திரங்களை மீட்டுக்கொள்வது குறைவாகவே உள்ளது.
அதிகரிக்கும் நிதிச் சுமை காரணமாக, மத்திய அரசு 2024-25 நிதியாண்டு முதல் SGB வெளியீடுகளை நிறுத்திவிட்டது. கடைசியாக 2024 பிப்ரவரி மாதம் ஒரு கிராமுக்கு ரூ. 6,263 என்ற விலையில் SGB வெளியானது. அந்த விலையில் இருந்தும் தற்போது தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்கு (ரூ.12,000-க்கு மேல்) உயர்ந்துள்ளது.
ஆனாலும், SGB-கள் ஒரு பக்கம் அரசுக்கு நிதிச் சுமையாக இருந்தாலும், மறுபுறம் சில நன்மைகளையும் அளித்துள்ளன. இந்த திட்டத்தால் சுமார் 150 டன்கள் அளவிற்குத் தங்க இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைத்து, ரூபாயின் மாற்று விகிதத்தைப் பாதுகாக்க உதவியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில்லறை முதலீட்டாளர்களால் இறக்குமதி குறைக்கப்பட்ட அளவிற்கு, ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி இருப்பில் தங்கத்தைச் சேர்த்துள்ளது ஒரு மறைமுகத் தடுப்பு நடவடிக்கை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ETF-களில் அதிகரிக்கும் முதலீட்டாளர் ஆர்வம் : தங்கப் பத்திரங்களைப் போலவே, காகிதத் தங்கம் என்று அழைக்கப்படும் தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளிலும் (Gold ETFs) முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. World Gold Council அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த தங்க ETF அளவு 77.3 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த மாத இறுதி நிலவரப்படி 10 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது.
குவாண்டம் ஏஎம்சி-யின் CIO சிராக் மேத்தா கூறுகையில், "இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை மற்ற அனைத்து சொத்து வகைகளையும் விட சிறந்த முதலீடாக மாறியுள்ளன. இதனால் இந்த விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்கள் தங்கள் மொத்த போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் பங்கை 5% -இல் இருந்து 15% வரை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியான எஸ்ஐபி (SIP) முதலீடுகள் காரணமாக, தங்க ETF-களில் சொத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications