இந்திய பங்குச்சந்தையில் பரிவர்த்தனை கணக்கீடு முறை (Settlement Cycle) குறிப்பிடத்தக்கப் பரிணாம வளர்ச்சியைக் கடந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பங்குச் சந்தையை மேலும் திறன் மிக்கதாகவும், விரைவானதாகவும் மாற்றுவதற்கான இந்த மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இன்று முதல் முறையாக இந்தியாவில் T+0 Settlement முறையின் "பீட்டா டெஸ்டிங்" (Beta Version) இன்று காலை துவங்கப்பட்டு உள்ளது. இது வெற்றி அடையும் பட்சத்தில் பிற நிறுவனங்களுக்கும், சேவைகளுக்கும் T+0 Settlement முறை கொண்டு வரப்படும்.

ஆரம்பக் காலம்: 90 களின் ஆரம்பத்தில், இந்திய பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செட்டில்மென்ட் என்பது ஒரு நீண்ட செயல்பாடாக இருந்தது. குறிப்பிட்ட பங்குகளுக்கு 14 நாட்கள் முதல் மற்ற பங்குகளுக்கு 30 நாட்கள் வரை கணக்கீடு காலம் நீடித்தது.
டிஜிட்டல் பரிமாற்றங்கள்: இதன் பின்பு இந்திய பங்குச்சந்தை டிஜிட்டல்மயமாக்கப்பட்ட பின்பு T+5 settlement முறை நீண்ட காலம் நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க பங்குச்சந்தையை உருவாக்குவதற்கான முயற்சியில் செபி, மத்திய அரசு, நிதியமைச்சகங்கள் தொடர்ந்து செயல்பட்டது.
இதன் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டில், செபி (SEBI) செட்டில்மென்ட் முறையை T+3 ஆகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் T+2 ஆக மேலும் குறைக்கப்பட்டது. இதன் மூலம் பரிவர்த்தனை செய்த பின்னர் பங்குகள் மற்றும் பணம் கிடைப்பதற்கான காத்திருப்பு நேரம் பெரிய அளவில் குறைக்கப்பட்டது.
T+1 ஐ நோக்கிய பயணம்: 2021 ஆம் ஆண்டில், செபி பங்குச்சந்தையில் உள்ள அனைத்து பங்குகளுக்கும் T+1 கணக்கீடு முறையை அறிமுகப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த முறை இந்த. பங்குச்சந்தையில் அனைத்து பங்குகளுக்கும், சேவைகளுக்கும் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், இந்திய பங்குச்சந்தை உலகளவில் குறைந்த கால பரிவர்த்தனை கணக்கீடு முறையைக் கொண்ட முன்னணி சந்தைகளில் ஒன்றாக மாறியது.
T+0 ன் எதிர்காலம்: தற்போது, செபி உடனடி பரிவர்த்தனை கணக்கீடு முறையான "T+0" ஐ நோக்கி 2023 இறுதியில் தனது பயணத்தைத் துவங்கி, இன்று பீட்டா டெஸ்டிங் செய்யும் அளவுக்கு வந்துள்ளது.
இந்த முறையில், ஒரு பங்குகளை வாங்கினால் அதே நாளில் பங்குகள் டிமேட் கணக்கிற்கு சேர்க்கப்படும், பங்குகளை விற்கப்பட்டால் அதேநாளில் பணம் டெபாசிட் செய்யப்படும். இதன் மூலம் பங்குச்சந்தை மேலும் விரைவானதாகவும், திறன்மிக்கதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய பங்குச்சந்தை: உலகளவில் பெரும்பாலான பங்குச்சந்தைகள் இன்னும் T+2 கணக்கீடு முறையையே பின்பற்றுகின்றன. உதாரணமாக, அமெரிக்கா மே 28 ஆம் தேதி T+1 க்கு மாற திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும் இதே முடிவை எடுத்துள்ளது.
ஆசியாவில் முதல் முறையாகச் சீனா T+0 முறையைக் கொண்டு வந்த நிலையில், தற்போது இந்தியா இதை நடைமுறையாக்கியுள்ளது. இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு வேகமாக உயரும் வேளையிலும், அன்னிய முதலீடுகளின் கூடாரமாக மாறியிருக்கும் வேளையில், செபியின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications