ஆந்திரா: கூடிய விரைவில் தமிழ்நாட்டைப் போலவே ஆந்திர மாநிலத்திலும் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. மாநில போக்குவரத்து துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கூடிய விரைவில் பெண்கள் ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்தார்.
பெண்களுக்கு இதுபோன்ற கட்டணமில்லா பேருந்து சேவைகளை வழங்குவதில் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் என்னென்ன சவால்கள் எழுந்தன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றை எல்லாம் சரி செய்யக் கூடிய வகையில் ஆந்திராவில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் தென்னிந்தியாவில் மூன்று மாநிலங்களில் பெண்களுக்கு இலவச அரசு பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னோடியாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடனே பெண்கள் உள்ளூர அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பயனடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் இதே நடைமுறையானது பின்பற்றி பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் ஆந்திர மாநில போக்குவரத்து துறைக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் மாநிலத்தில் சாலை போக்குவரத்துக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என தெரிவித்த அவர், தான் 11 வயதாக இருக்கும் போதே சாலை விபத்தில் தன்னுடைய தந்தையை இழந்ததை குறிப்பிட்டு பேசினார.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு மாநிலத்தில் போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அது மட்டும் இன்றி மாநிலத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications