தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்படுகின்றன. ஒட்டுமொத்த நாடே தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனிக்கின்றன அந்த அளவுக்கு நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
இந்த தேர்தலில் திமுக பெரிய கூட்டணி பலத்தோடும், அதிமுக பெரிய கூட்டணி பலத்தோடும் மோதுகின்றன. நாம் தமிழர் கட்சி , தமிழக வெற்றி கழகம் ஆகியவை தனித்து களம் காண்கின்றன. இந்த தேர்தல் முடிவுகள் பல தொடக்கங்களுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தாண்டி மக்கள் சீமான் மற்றும் விஜய்க்கு எம்.எல்.ஏ பதவியை தருவார்களா? அவர்களின் கட்சிகளுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பது தான் தமிழ்நாடு முழுவதும் விவாத பொருளாக உள்ளது.

நாளைய தினம் தேர்தல் முடிவுகளில் ஒட்டுமொத்த மக்களின் கவனமும் குறிப்பிட்ட சில தொகுதிகளின் மீது தான் இருக்க போகிறது. அப்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் நட்சத்திர தொகுதிகளை பார்க்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 4ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். எனவே கொளத்தூர் தொகுதி முடிவுகள் கவனம் பெறுகின்றன. அதே போல அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் களம் காண்கிறார். அந்த வகையில் எடப்பாடி தொகுதியும் முக்கியம் பெறுகிறது.
முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அந்த வகையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளின் முடிவுகள் அதிகமான மக்களால் கவனிக்கப்படும் முடிவுகளாக மாறியுள்ளன. நாம் தமிழர் கட்சி சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதால் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக உள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, திமுக பொது செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி ,சிறை வாசத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜி போட்டியிடும், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெறுகிறது. அண்மையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியும் கவனம் பெறுகிறது.
தமிழக வெற்றி கழகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டியிடும் சென்னை தி. நகர் தொகுதி, ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதி, கே.ஏ. செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதிகள் கவனம் பெற்றுள்ளன.
அதே போல தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதி, அவரது மகன் விஜய் பிரபாகரன் போட்டியிடும் விருதுநகர் தொகுதி, பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதி, சுந்தர் சி போட்டியிடும் மதுரை மத்திய தொகுதி ஆகியவையும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications

