முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் அண்ணன் சீர் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்ணன் சீர் திட்டம் தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம் தான் அண்ணன் சீர் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும். இந்த அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக 812 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த, தகுதியுடைய மணப்பெண்களுக்கு 22 கேரட் தரத்திலான 8 கிராம் தங்க நாணயமும். ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்றும் விண்ணப்பம் செய்ய தனி இணையதளம் அறிவிக்கப்படும் என்றும் முன்னரே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயம் என்றும், தகுதியுள்ள பெண்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், ஆதார் வரும் வரை மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் ஆதார் விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பாக பெண் வாக்காளர்களை மையப்படுத்தி தான் பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெண் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
மகளிருக்கு இலவச பேருந்து பயணம், தாய்மாமன் சீர் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது அண்ணன் சீர் திட்டமும் நடைமுறைக்கு வர இருக்கிறது. தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் சீர் என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாக கருதப்படுகிறது, அந்த வகையில் மணப்பெண்ணின் அண்ணணாக முதலமைசர் விஜய் அதாவது தமிழ்நாடு அரசு சார்பாக இந்த பட்டுப்புடவையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேதிக்கு 22 கேரட் தங்கம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றாலே 1.10 லட்சம் ரூபாய் தேவை. பல குடும்பங்களுக்கும் எட்டாக்கனியாக தங்கம் மாறி வரும் நிலையில் அரசின் இந்த திட்டம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த திட்டத்தில் ஓராண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மணப்பெண்களுக்கு மட்டுமே தங்கம் கிடைக்கும். விரைவில் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications

