கூட்டுறவுத்துறை மூலம் பெண்கள் தொழில் தொடங்க கடன் வழங்குவதற்காக வாரம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் படி இனி வாரம் தோறும் கூட்டுறவுத் துறை சார்பாக கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதே போல வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமை துறை கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
இந்த சிறப்பு முகாம்களில் விவசாய கடன்கள், ஊரக தொழில் கடன்கள், வீட்டு வசதி கடன்கள், வீட்டு அடமான கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், திருநங்கையருக்கான கடன்கள், மின்சார ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமை துறை கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடன் வழங்கும் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே பெண்கள் , சுய தொழில் புரிபவர்கள், கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த கடன் முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம். பொதுவாக நாம் கூட்டுறவு வங்கிக்கு சென்று கடன் பெற வேண்டும் என்றால் சில அலைச்சல்கள் இருக்கும். ஆனால் இத்தகைய முகாம்களில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினம் கடன் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9884000845 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications

