ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் முறையான பயனாளிகளை சென்று சேர்வதை உறுதிப்படுத்த அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் eKYC செய்யாமல் விடுபட்டவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.
ரேஷன் கடைகள் வாயிலாக தான் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவை மக்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அரிசி அட்டைதாரர்கலுக்கு 35 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் அனைத்து ரேஷன் அட்டைகளிலும் கேஒய்சி முடித்திருக்க வேண்டும். இதற்காக பல முறை அவகாசம் கொடுத்தும் வேலையை முடிக்காதவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான eKYC சரிபார்ப்பு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் முகாம் நடக்கும்.
ரேஷன் கார்டில் உள்ள போலியான பெயர்களை கண்டறிந்து அதனை நீக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் கைரேகை சரிபார்ப்பு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் இதுவரை 96.21% அளவுக்கு eKYC பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ளவர்களுக்கு கேஒய்சி மேற்கொள்ள தான் முகாம் நடத்தப்படுகிறது.
எனவே இதுவரை ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை ரேஷன் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் உள்ள குடும்ப உறுப்பினரும் நேரில் சென்று கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து அட்டையில் உள்ள எந்த உறுப்பினர் கேஒய்சி செய்ய வேண்டும் என்பதை கூறுவார். அவரது ஆதார் எண்ணை கொடுத்து கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இது முற்றிலும் இலவசம் என்பதால் மக்கள தவறாமல் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு eKYC முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதியவர்களுக்கு கைவிரல் ரேகை பதியவில்லை என்றால் கருவிழி மூலம் தகவல்கள் சரிபார்க்கப்படும். எனவே இதுவரை eKYC செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள், தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கேஒய்சி செய்யாத ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவதை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. சில சமயங்ஜளில் ரேஷன் கார்டே ரத்து செய்யப்படலாம். ரேஷன் கார்டு மகளிர் உரிமை தொகை உள்பட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான முக்கியமான ஆவணமாகும்.


Click it and Unblock the Notifications

