தமிழ்நாடு அரசின் மகளிர் வெற்றி பயணம் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் வெள்ளை போர்டு பேருந்துகள் மட்டுமில்லாமல் மற்ற பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்ய முடியும். நாளை முதல் எந்தெந்த பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம், எந்தெந்த பேருந்துகளில் இலவசம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கடந்த திமுக ஆட்சியில் நகரங்களில் ஓடும் வெள்ளை போர்டு பேருந்துகள் அதாவது சாதாரண பேருந்துகள் மற்றும் ஊரகம், கிராமங்களில் ஓடும் டவுன் பஸ்களில் மகளிர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதனால் பெண்கள் மாதாந்திர போக்குவரத்து செலவை சேமிக்க முடிந்தது. இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விரிவாக்கம் செய்துள்ளது.

தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிமீ வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பீக் அவர்களில் பெண்கள் சாதாரண பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் தான் வெற்றிப் பயணம் என்ற பெயரில், இந்த திட்டம் நாளை முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன்படி மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும், மகளிர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யலாம். வெள்ளை போர்டு கொண்ட பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
இது சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்களுக்கு பெரிய வரபிரசாதம். ஏனெனில் பீக் அவர்களில் வெள்ளை போர்டு கொண்ட சாதாரண பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படும், அந்த சமயத்தில் அந்த பேருந்துக்காக காத்திருக்க வேண்டும் அல்லது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி இருந்தது. இனி அந்த பிரச்சினை இல்லை, பேருந்து நிலையத்துக்கு வந்து வர கூடிய பேருந்தில் ஏறி செல்லலாம். பேருந்து நிலைய காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரண கட்டண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். பெண்கள், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்.
எனவே பெண்களே நாளை முதல் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய முடியும். மாநகரங்களில் இயங்கும் பேருந்துகள் ஏசி பேருந்துகளை தவிரவும் வெளியூர் செல்லும் பேருந்துகளை தவிரவும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கிராமங்களில் டவுன் பஸ்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி 12,692 பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதாவது மொத்த பேருந்துகளில் 69% என சொல்லப்படுகிறது. இந்த வெற்றி பயணம் திட்டம் மூலம் 82 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.


Click it and Unblock the Notifications


