தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு தற்போது மத்திய நிதித்துறை இயக்க தடை விதித்துள்ளது. இந்த வங்கியில் இருந்து ஒரு மாதத்திற்கு சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் 25000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.
எனினும் கல்வி செலவு, அவசர மருத்துவ தேவை, திருமண செலவுகள் உள்ளிட்ட முக்கிய செலவுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 25,000 ரூபாய் மேல் எடுத்துக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையானது இன்று மாலை 6 மணி முதல் ( நவம்பர் 17) டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்றும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
வேறு என்னென்ன?
மேலும் லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள் உள்ளிட்ட சிலவற்றுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது.
பிசிஏ நடவடிக்கை
சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாக, ரிசர்வ் வங்கியின் அதிரடியாக இந்த வங்கியின் மீது PCA நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதி வலிமை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி மீது இந்த நடவடிக்கையை எடுத்தது ரிசர்வ் வங்கி.
ஏன் இந்த நடவடிக்கை
இந்த பிசிஏ நடவடிக்கை வங்கி நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில் அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளின் இது முக்கிய நடவடிக்கை ஆகும்.
இதன் மூலம் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, இவ்வங்கியின் நிர்வாகம் மற்றும் நிதி நிலை, வர்த்தக முறை, வர்த்தகம் குறித்து ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது.
சாமானிய மக்களின் கதி என்ன?
ஒரு புறம் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், பெரிய அளவில் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு சற்று பதற்றத்தினை கொடுத்தாலும், வங்கியில் டெபாசிட் செய்த யாரும் பயப்பட வேண்டாம். உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications