இன்று ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக் கூறிய அந்தத் தருணம் பலருக்கும் கைதட்டத் தூண்டியது யாராலும் மறுக்க முடியாது.
இதேபோல் பதவியேற்ற அடுத்த சில மணிநேரத்தில் மக்களின் பெரும் சுமைகளைக் குறைக்கும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகளில் முதல்வர் முக.ஸ்டாலின் கையெழுத்திட்ட போது விசில் அடிக்கவும் தூண்டியது என்றால் மிகையில்லை.
அப்படி என்ன சொல்லிவிட்டார் என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்..!
கொரோனா மருத்துவச் சிகிச்சை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலரும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை பெற்று வந்தாலும், பலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் விலையில் தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனை சிகிச்சை
வருமானம், வேலைவாய்ப்பு எனப் பல பாதிப்புகள் நிறைந்த இந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் மருத்துவக் கட்டணத்தைத் தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசே ஏற்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டு
இந்த உத்தரவின் படி அரசு மருத்துவக் காப்பீட்டு வாயிலாகக் கொரோனா நோய் சிகிச்சைக்கான செலவுகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். இதனால் பொதுமக்கள் எவ்விதமான நிதிச்சுமையுமின்றி சிகிச்சை பெற முடியும். இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்பது தமிழ்நாடு தான்.
பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்
பெண்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் திமுகத் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது போல் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டணம் கொண்ட நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உட்பட அனைத்து பெண்களும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் அதாவது மே 8ஆம் தேதி முதல் பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
1200 கோடி ரூபாய் மானியம்
இதன் மூலம் ஏற்படும் 1200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் அரசு மானியமாக இத்தொகையைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கும் எனவும் முதல்வர் கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரிசி ரேசன் கார்டுகள்
இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்த அரிசி ரேசன் கார்டுகளை வைத்துள்ள 2.07 கோடி குடும்ப அட்டைகளுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 4000 ரூபாய் உதவித் தொகையில் முதல் கட்டமாக மே மாதம் 2000 ரூபாயை அளிக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.
மத்திய அரசு எப்போது செய்யும்
பால் விலை குறைப்பு
இதோடு ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டு, இப்புதிய விலை மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
ஏழை, சாமானிய மக்கள் வரையில் அனைவரும் தினமும் பயன்படுத்தும் பால் விலை குறைக்கப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏழை, சாமானிய மக்கள் மகிழ்ச்சி
இந்த அறிவிப்புகள் மூலம் ஏழை, சாமானிய மக்களின் வாழ்வாதாரச் சுமைகளைப் பெரிய அளவில் குறைத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. மேலும் இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை முதல் நாளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மூலம் வெளிப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற அறிவிப்புகளை முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவிக்குமா..? உங்கள் கருத்து என்ன..?


Click it and Unblock the Notifications