டெல்லி: டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், பிரான்சின் ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது இந்தியா பிரான்ஸ் இடையேயான வணிக உறவினையும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன், இது குறித்து ஏ350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும், அகலம் குறைவான 210 வாகனங்கள் வாங்க உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததினை போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானம் வாங்க ஒப்பந்தம்
ஏர்பஸ் நிறுவனத்துடனான நல்லுறவின் மத்தியில், 250 விமானங்கள் வாங்குவதற்கான அறிவிப்பினை வெளியிடுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரன், இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க பிரான்சின் விமான நிறுவனங்கள் காட்டும் ஆர்வத்தையே, ஏர்இந்தியா - ஏர்பஸ் ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாகக் தெரிவித்துள்ளார்.
பெரும் கடன் பிரச்சனை
பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஏர் இந்தியாவை யாரும் வாங்கிவிட மாட்டார்களா? இப்பிரச்சனை இதனுடன் முடிவுக்கு வந்துவிடாதா? என்று பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில் தான் 18,000 கோடி ரூபாய்க்கு டாடா குழுமமே மீண்டும் ஏர் இந்தியாவை வாங்கியது. ஏற்கனவே ஏர் ஏஷியா, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களை நிர்வகித்து வரும் டாடா, ஏர் இந்தியா மூன்றாவது நிறுவனமாக வந்தது.
டாடா குழுமத்தின் வசம்
பெருத்த கடன் பிரச்சனைக்கு மத்தியில் டாடா வசம் வந்த ஏர் இந்தியா, தற்போது வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் ஏர் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமான 250 விமானங்களை வாங்க உள்ளது. இது ஏர் இந்தியாவின் இயக்கும் திறனை அதிகரிக்கும் எனலாம்.
முன்னதாக அறிவிப்பு
முன்னதாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 500 விமானங்களை வாங்க உள்ளதாகவும், 100 பில்லியன் டாலர் புதிய முதலீடுகளை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனை உறுதிபடுத்தும் விதமாக டாடா குழுமம் அதன் விரிவாக்க பணியினை சிறப்பாக செய்து வருகின்றது எனலாம்.
ஏர்பஸ் & போயிங்கிடம் ஆர்டர்
ஏர் இந்தியா தற்போது உலக தரம் வாய்ந்த விமானங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இருப்பதை அடுத்து , இது டாடா குழுமத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். ஏர்பஸ் மற்றும் அதன் போட்டி தயாரிப்பாளரான போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் ஆர்டர்களை ஏர் இந்தியா கொடுத்துள்ளது.
விமான எண்ணிக்கை அதிகரிக்கும்
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கைப்பற்றிய இந்த ஓராண்டு காலத்தில் 27% விமானம் அதிகரித்து உள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திடம் 100 விமானங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்டர் செய்துள்ள 250 விமானங்களும் சேர்க்கும்போது, இன்னும் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனலாம்.


Click it and Unblock the Notifications