டாடா குழுமத்தின் கீழ் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஏர் இந்தியா தனது வர்த்தகத்தையும், சேவைகளையும் விரிவாக்கம் செய்ய 500 விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ள நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரில் சுமார் 18000 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டு உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்பு வேகமாக வளர்ச்சி அடைந்தாலும், அதிகளவிலான லாபம் ஈட்டும் நிறுவனமாக இன்னும் மாறவில்லை. இந்தப் பயணத்தில் ஏர் இந்தியாவின் முந்தைய கடனுக்கு மறுநிதியளிக்கும் விதமாகப் புதிய கடன்களை வாங்க திட்டமிட்டு உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாட்டு விமானச் சேவையில் பெரிய அளவிலான விரிவாக்கம் செய்ய உள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய இரு வங்கிகளிடம் இருந்து நிலுவையில் உள்ள கடனுக்கு மறுநிதியளிக்கக் குறுகிய கால அடிப்படையில் ஒரு வருட கடனாகச் சுமார் 18000 கோடி ரூபாயை பெற உள்ளது.
ஏர் இந்தியா
டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவை வாங்கும் போது இத்தொகையைக் கடன் வாயிலாகவே செலுத்தியது. இந்தக் கடனை அடைக்க இன்னும் வங்கிகள் நீண்ட காலக் கடன் சேவைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் குறுகிய கால அடிப்படையில் ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்கப்பட்டு உள்ளது.
நீண்ட காலக் கடன் திட்டம்
வங்கிகள் ஏர் இந்தியாவுக்கான நீண்ட காலக் கடன் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது, இதேவேளையில் டாடா நிர்வாகமும் இதற்குக் கோரிக்கை வைத்து வருகிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதிநிலை அடிப்படையில் நீண்ட காலக் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும். எனவே ஏர் இந்தியாவுக்கான நீண்ட காலக் கடன் திட்டம் அறிவிக்கப்படும்.
15000 கோடி ரூபாய் கடன்
ஜனவரி 2022ல் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்ற டாடா குழுமம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-விடம் இருந்து 10000 கோடி ரூபாயும், பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து 5000 கோடி ரூபாயும் வருடத்திற்கு 4.25 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெற்றது. இந்தக் கடனை வட்டியுடன் அடைக்கவே தற்போது 18000 கோடி ரூபாய் மறுநிதியளிப்புக் கடனை பெறுகிறது ஏர் இந்திய நிர்வாகம்.
ஆர்பிஐ வட்டி விகிதம்
இந்தக் கடனை டாடா குழுமம் வாங்கும் போது ரிசர்வ் வங்கியின் பென்ச்மார்க் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது, இந்தக் கடனுக்குப் பின்பு ஆர்பிஐ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ரெப்போ விகிதத்தைச் சுமார் 2.25 சதவீத வட்டியை உயர்த்தியது. இதனால் தற்போது ஏர் இந்தியா புதிய வட்டி விகிதத்தில் தான் இந்த 18000 கோடி ரூபாய் கடனை பெறும்.
மறுசீரமைப்பு
ஒரு பக்கம் டாடா நிர்வாகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகளைச் செய்து வரும் வேளையில், மறுபுறம் தனது கிளை நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. இதன் மூலம் ஒற்றை நிறுவனமாக மிகப்பெரிய ஆதிக்கத்தை இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications