பங்குச் சந்தையில் பெரிய அளவில் லாபம் அல்லது ஆதாயம் பார்க்க வேண்டுமானால் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் மட்டுமே சாத்தியமாகும். சரியான பங்குகளை தேர்வு செய்து, அதில் முதலீடு செய்து விட்டு பொறுமையாக இருந்தால், நிச்சயம் நம் செல்வம் எதிர்பார்த்ததை காட்டிலும் பெரிய அளவில் பெருகும். அதற்கு நல்ல உதாரணம் டிசிபிஎல் பேக்கேஜிங் பங்குகளை சொல்லலாம். 16 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று 197 மடங்கு பெருகியிருக்கும்.
டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் பல்வேறு துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கும் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவர். இந்நிறுவனம் மடிப்பு அட்டைப்பெட்டிகள், லித்தோ லேமினேஷன் மற்றும் பிளாஸ்டிக் அட்டைப்பெட்டிகள் உள்ளிட்ட பேக்கேஜிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. நேற்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.4150.50ஆக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு முன் இப்பங்கின் விலை ரூ.21ஆக இருந்தது. கடந்த 16 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 19,650 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது.

16 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.97 கோடியாக உயர்ந்திருக்கும். அதேசமயம் குறுகிய கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமாரான ஆதாயத்தையே வழங்கியுள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 27.32 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் பங்கு விலை 26.48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.37.7 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 32 சதவீதம் உயர்ந்து ரூ.479.7 கோடியாக அதிகரித்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.18.8 கோடியும், மொத்த வருவாயாக ரூ.363.6 கோடியும் ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் நிலவரப்படி, டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம் 91 லட்சம் நிலுவையில் உள்ள ஈக்விட்டி பங்குகளை கொண்டிருந்தது. இதில், புரோமோட்டர்ஸ் வசம் 55.74 சதவீத பங்குகள் உள்ளன.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications