டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.). இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனம். டி.சி.எஸ். நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, டி.சி.எஸ். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6.08 லட்சமாக உள்ளது.
டி.சி.எஸ். நிறுவனம் தனது தேவைக்கு ஏற்ப வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டி.சி.எஸ். நிறுவனம் தற்போது ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்பாராத ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. மேலும் அந்த விவகாரம் தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023 ஜூலையில் மகாராஷ்டிரா தொழிலாளர் துறை அமைச்சகத்திடம், டி.சி.எஸ். நிறுவனத்துக்கு எதிராக புனேவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் சங்கமான நாசென்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட் ஒரு புகாரை தாக்கல் செய்தது. அந்த புகாரில், டி.எஸ்.எஸ். நிறுவனம் வேலைக்கு எடுத்த நபர்களை பணியமர்த்துவதில் தாமதம் செய்கிறது. இதனால் 200 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா தொழிலாளர் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாசென்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட்டின் தலைவர் ஹர்பிரீத் சலுஜா கூறுகையில், நல்ல நம்பிக்கையுடன் டி.சி.எஸ். நிறுவனத்திடம் இருந்து பணிவாய்ப்பு மற்றும் வேலையில் சேருவதற்கான தேதியை பெற்ற பிறகு, தங்கள் முந்தைய பதவிகளை ராஜினாமா செய்த இந்த ஊழியர்களின் தற்போதைய அவலநிலை என்.ஐ.டி.இ.எஸ். கவனத்தை ஈர்த்தது. அவர்கள் அனைவரும் 1.8 முதல் 15 ஆண்டுகள் வரை பல்வேறு அனுபவங்களை கொண்டவர்கள். தற்போது வருமான ஆதாரம் இல்லாமல், நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் மற்றும் குடும்ப பொறுப்புகளை சந்திக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், நான் டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைக்கான அனைத்து நேர்காணல் சுற்றுகளையும் முடித்து விட்டேன். மேலும் மனிதவள (எச்.ஆர்.) துறை எனக்கு இமெயில் மூலம் சம்பள விவரத்தை ஒப்புதலுக்காக அனுப்பியது. நானும் அதை ஏற்றுக்கொண்டேன். இதனையடுத்து ஒரு வாரத்தில் பணிநியமனத்துக்கான ஆணை கடிதத்தை அனுப்புவதாக எச்.ஆர். துறை தெரிவித்தது. ஆனால் நான்கு மாதங்கள் கடந்த விட்டன. வேலை தொடர்பாக எச்.ஆருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டேன். அதற்கு அவர்கள் ஆட்சேர்ப்பை நிறுத்தி வைத்து இருப்பதாகவும், அதிக நேரம் எடுக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைக்கு சேருவோம் என்ற நம்பிக்கையில் முன்பு பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன். இப்போது டி.சி.எஸ். நிறுவனத்தால் வேலையில்லாமல் உள்ளேன் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக, 2023 நவம்பர் 2ம் தேதி மதியம் நிறுவனத்துக்கும் புகார்தாரருக்கும் இடையிலான கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஆட்சேர்ப்பு தாமதம் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications