இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் சிஇஓ-வாக மோஹித் ஜோஷி 2023 டிசம்பர் மாதம் தலைமையேற்ற பின்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மோஹித் ஜோஷி உருவாக்கிய விஷன் 2027 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 5 சதவீதம் சரிந்து வந்த டெக் மஹிந்திரா வருவாய் மற்றும் லாபத்தில் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை எட்டி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 6 சதவீதத்தில் இருந்து 14.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவுகளைப் பார்க்கும் போது மோஹித் ஜோஷி சம்பவகாரனாக மாறியுள்ளார். இக்காலாண்டில் டிசிஎஸ், ஹெச்சிஎல் காட்டிலும் அதிகமான லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளாது டெக் மஹிந்திரா.
செப்டம்பர் காலாண்டில் டெக் மஹிந்திராவின் லாபம் வருடாந்திர அடிப்படையில் 32.7 சதவீதம் உயர்ந்து 1,585.6 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,194.5 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 15.6 சதவீதம் உயர்ந்து 16,180.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 15 சதவீதம் அதிகரித்து 13,884 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. மேலும் வருவாய் அளவீட்டைப் பார்க்கும் போது வருடாந்திர அடிப்படையில் 11 சதவீதம் அதிகரித்து 73,188 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவில் மொத்த லாபம் சுமார் 21 சதவீதம் அதிகரித்து 5,132 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதேபோல் வருவாய் அளவுகள் 12 சதவீதம் உயர்ந்து 35,620 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் லாபம் மற்றும் வருவாய் ஆகிய இரண்டிலும் டெக் மஹிந்திரா நிறுவனம் டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனத்தை முந்தியுள்ளது. லாபம், வருவாய் தாண்டி இக்காலாண்டு முடிவில் டெக் மஹிந்திரா அதன் முதலீட்டாளர்களுக்கு 5 ரூபாய் முக மதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு சுமார் 15 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
இதைவிட முக்கியமாக 1:1 போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது, இதன் மூலம் டெக் மஹிந்திரா பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரருக்கும் ஒரு பங்கு இலவசமாகக் கொடுக்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.
இறுதியாக டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,52,206 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 11.7 சதவீதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications

