முதலீட்டு மோசடிகளில் சிக்கி தங்கள் பணத்தை இழக்கும் நபர்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். பங்குகளில் முதலீடு செய்வது செல்வத்தை உருவாக்க உதவும் என்ற தகவலை மட்டும் வைத்துக்கொண்டு தெரியாத தளங்களில் மக்கள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து வருகின்றனர். சமீபத்தில் 40 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி ரூ. 33.75 லட்சத்தை இழந்துள்ளார்.
மற்ற மோசடி சம்பவங்களை போல இந்த சம்பவமும் ஒரு சாட் குரூப்பில் தான் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை பங்கு வர்த்தகம் தொடர்பான ஒரு குரூப்பில் இணைத்துள்ளனர். அதன் பிறகு குழுவில் இருந்த ஒருவர் ஸ்டாக் புரோக்கர் போல காட்டிக் கொண்டு ஒரு பிரபலமான பங்கு வர்த்தக நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்று கூறியுள்ளார். அவரின் ஆலோசனையை நம்பி பாதிக்கப்பட்டவர் முதலீடு செய்ய முடிவு செய்தார்.

மோசடி செய்த நபர் முதலில் ஒரு ஆன்லைன் லிங்கை பகிர்ந்துள்ளார். அதை பாதிக்கப்பட்ட நபர் டவுன்லோட் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் முதலீட்டுக்கு ஆரம்பத்தில் சிறிய லாபமும் கிடைத்துள்ளது. அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் முதலீடு செய்துள்ளார்.
இதனால் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மொத்தமாக மோசடிக்காரர்களின் கணக்கிற்கு சென்றது. பாதிக்கப்பட்டவர் ஆறு வங்கி கணக்குகளில் இருந்து 33.75 லட்சத்தை முதலீட்டுக்காக அனுப்பியுள்ளார். அதன் பிறகு அவர் டவுன்லோட் செய்த அப்ளிகேஷனில் பங்குகளை விற்பனை செய்ய முயன்ற போது, அவரால் அதை விற்பனை செய்ய முடியவில்லை. அப்போதுதான் தான் ஒரு மோசடி வலையில் விழுந்துள்ளதை உணர்ந்துள்ளார்.
மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?:
வர்த்தகத் தளத்தை சரிபார்க்கவும்: எப்போதும் நம்பகமான மற்றும் பதிவு செய்யப்பட்ட தரகு நிறுவனங்களை பயன்படுத்தவும். அதற்கான பிரத்தியேக அப்ளிகேஷன்களின் உண்மைத் தன்மை குறித்து தெரிந்து கொள்ளவும்.
முதலீடு செய்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வ பதிவுகளைச் சரிபார்க்கவும்: சந்தேகத்திற்கிடமான குரூப்களில் இருந்து வெளியேறவும். நம்பத்தகாத லாபத்துடன் முதலீடுகள் செய்யச் சொல்லி ஊக்குவிக்கும் குரூப்பில் இருந்து தைரியமாக வெளியேறுங்கள். ஏனெனில் தற்போது ஒரு குரூப்பை உருவாக்கி அதில் அப்பாவி மக்களை சேர்த்து ஏமாற்றி, அதன் பிறகு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதிக வருமானம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: ஒரு முதலீட்டுக்கு அசாதாரணமாக அதிக வருமானம் வருவது போல காண்பிக்கப்பட்டாலோ அல்லது ஆபத்து இல்லாமல் வருமானம் கிடைக்கும் என்ற உறுதியளிக்கப்பட்டாலோ அது ஒரு மோசடியாக இருக்கலாம். பணத்தை எடுக்க அனுமதிக்காத அல்லது பல வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற சொல்லும் வர்த்தகத் தளங்கள் மோசடியானதாக இருக்கலாம்.
உங்கள் குடும்பத்தாரிடம் மோசடி தொடர்பான விஷயங்கள் குறித்தும், மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகள் குறித்தும் தெரியப்படுத்துங்கள். வீட்டிற்கு ஒருவர் இதை செய்தாலே வீட்டில் இருக்கும் நபர் ஏமாறாமல் இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications