முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பு பெண் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் , திருமணத்தின் போது அண்ணன் சீர் திட்டம், குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் திட்டம், இலவச சிலிண்டர்களை வழங்கும் அன்னபூரணி திட்டம் உள்ளிட்டவற்றை விஜய் அரசு அறிவித்து வருகிறது. இதில் முக்கியமாக தாய்மாமன் சீர் திட்டம் இந்த மாதத்தில் நடைமுறைக்கு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தமிழக அரசு சார்பில் தாய்மாமன் சீராக, தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒரு கிராம் மோதிரம் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும். அண்மையில் கூட இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜயால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் எப்படி தங்கள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பெறுவது எப்படி விண்ணப்பம் செய்வது என பல குழப்பங்கள் நிலவுகின்றன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன் பெற தாய்மார்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உங்களுக்கு குழந்தை பிறந்தால் தானாகவே நீங்கள் திட்ட பயனாளிகளாக மாறிவிடுவீர்கள். அரசே நேரடியாக அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்களை திரட்டிவிடும்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்ப சுகாதார நிலையங்களீல் பதிவு செய்து ஆதார், ஸ்மார்ட் கார்டு, பிக்மி எண், தாயின் வங்கி கணக்கு விவரம் பெறப்படுகிறது. இதனை கொண்டும் மருத்துவமனை தரப்பில் வழங்கப்படும், டிஸ்சார்ஜ் விவரம் ஆகியவற்றை கொண்டும் அரசே பயனாளிகளை தேர்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தற்போதைக்கு இந்த திட்டத்தில் 11,500க்கு மேற்பட்டோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக நாளிதழ்களீல் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் திட்டம் தொடங்கும் நாளில், தகுதியானவர்களுக்கு அழைப்பு வரும் என கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சுகாதார துறை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பயனாளிகளை தேர்வு செய்து வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கினாலும் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்.
எனவே கர்ப்பிணிகள் முறைப்படி அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பத்தை பதிவு செய்து தவறாமல் மாதாந்திர சோதனைகளை செய்ய வேண்டும். மேலும் பிக்மி எண் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். இதற்காக வழங்கிய மொபைல் எண்ணை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த எண்ணில் தான் நீங்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்களா இல்லையா என்பதற்கான மெசேஜ் வரும்.


Click it and Unblock the Notifications

