கர்நாடக சட்டப்பேரவையில் இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா 2025-26ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சித்தராமையா அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது. மானியம் அதிகரிப்பு, மெட்ரோ விரிவாக்கம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
கர்நாடக பட்ஜெட்டின்படி, பெங்களூருவின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.3,000 கோடி மானியம், நடப்பு ஆண்டில் ரூ.7,000 கோடியாக உயர்த்தப்படும். இந்த மானியங்களை பயன்படுத்திக் கொள்ளவும், முக்கியமான வளர்ச்சி பணிகளை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தவும் ஒரு புதிய சிறப்பு பிரிவு நிறுவப்படும். நம்ம மெட்ரோ 79.65 கி.மீ. நீளமுள்ள ரயில் வலையமைப்பில் 68 நிலையங்களை இயக்குகிறது. தினமும் 8.5 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.

பெங்களூருவில் தற்போது பச்சை மற்றும் ஊதா என இரண்டு மெட்ரோ பாதைகள் செயல்பாட்டில் உள்ளன. பிங்க் மற்றும் மஞ்சள் பாதை இன்னும் கட்டுமானத்தில் உள்ளன அடுத்த இரண்டு ஆண்டுகளில் மெட்ரோ நெட்வொர்க்கில் கூடுதலாக 98.60 கி.மீ. வழித்தடங்களை சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ நெட்வொர்க்கை தேவனஹள்ளி வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தேவனஹள்ளியில் 407 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன பெங்களூரு சிக்னேச்சர் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. மாநில அரசு நிதியின்கீழ் இந்த பகுதிக்கு இணைப்பை வழங்க மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டுவது மாநில அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றாகும். எனவே நம்ம மெட்ரோ கட்டம்-3 திட்டத்துடன் சேர்த்து 40.5 கி.மீ. நீள இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க சர்வதேச தரத்திலான சோதனை பாதை மற்றும் பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அதிநவீன மின்சார வாகன தொகுப்பு பெங்களூருவில் ரூ.25 கோடி செலவில் நிறுவப்படும். ரூ.812 கோடி செலவில் பையப்பனஹள்ளி-ஓசூர் மற்றும் யஷ்வந்த்பூர்-சன்னசந்திரா வழித்தடங்களில் 70 கி.மீ. ரயில் பாதைகளை இரட்டிப்பாக திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் புறநகர் ரயில் திட்டம் ரூ.15,767 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications