மகாராஷ்டிராவில் பிரபலமான கூட்டுறவு வங்கிகளில் ஒன்று நியூ இந்தியா கூட்டுறவு வங்கி. இந்த வங்கிக்கு மொத்தம் 28 கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்தபோது, வங்கியின் பிரபாதேவி மற்றும் கோரேகான் கிளைகளில் மொத்தம் ரூ.122 கோடிக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில், அந்த வங்கியின் பொதுமேலாளரும், கணக்கு பிரிவு தலைவருமான ஜிதேஷ் மேத்தா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி தேவர்ஷி கோஷ், தாதர் காவல் நிலையத்தில், ரூ.122 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கியின் பொது மேலாளர் மற்றும் கணக்கு பிரிவு தலைவரான ஹிதேஷ் மேத்தா மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், மேத்தாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, பிரபாதேவி மற்றும் கோரேகான் வங்கி அலுவலகங்களின் பெட்டகங்களில் இருந்து ரூ.122 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில், கடந்த வாரம் ஹிதேஷ் மேத்தாவை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (இஓடபுள்யூ) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று அந்த வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அபிமன்யு போனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இதுவரை இந்த வழக்கில், ஹிதேஷ் மேத்தா, அபிமன்யு மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர் தர்மேஷ் பவுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி, 28ம் தேதி வரை பொருளாதார குற்றப்பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அபிமன்யு, 2019 முதல் 2024 வரை வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார்.மேலும் ஹிதேஷ் மேத்தாவின் நேரடி மேலதிகாரியாகவும் இருந்தார். கடந்த செப்டம்பரில் அபிமன்யுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதி கோரி ரிசர்வ் வங்கியிடம் அந்த வங்கி விண்ணப்பம் செய்து இருந்தது. ஆனால் அதனை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இந்த ஆண்டு ஜனவரி வரை புனே கிளையின் தலைமை செயல் அதிகாரியாக அவரை வங்கி வைத்திருந்தது. கடந்த 6ம் தேதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2019-20ம் ஆண்டின் இருப்பு நிலை அறிக்கை, வங்கியில் பெரிய பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை காட்டியது. ஆனால், இயக்குனர்கள் குழுவுக்கும், வங்கியின் கிளைகளுக்கும் இடையே இணைப்பாக இருந்த அபிமன்யு, வங்கியில் பணம் இருப்பது தனக்கு தெரியாது என்று கூறுகிறார். வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக அவருக்கு இந்த பரிவர்த்தனைகளை அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கின் மற்ற குற்றவாளிகளிடமிருந்து போனுக்கு லஞ்சம் கிடைத்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்
வங்கி ஆவணங்களின்படி, வங்கியின் பெட்டகத்தில் பணம் வைத்திருப்பதற்கான உச்சவரம்பு ரூ.20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த உச்ச வரம்பு அதிகரிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், பெட்டகத்தை சரிபார்த்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரூ.122 கோடி காணவில்லை என்பதை கண்டுபிடித்தனர். பெட்டகத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை வைக்கும் திறன் கொண்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வங்கி மற்றும் அதன் பெட்டகத்தில் உள்ள உண்மையான பணத்திற்கும், புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் உள்ள முரண்பாடுகள் ஏன் ஆய்வுகளின்போது சுட்டிக்காட்டப்படவில்லை என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications