ஊறுகாய்ன்னு சொன்ன உடனே அதனை சுவைக்காமலே அதன் சுவையை உணர்வோம். வீட்டில் செய்த ஊறுகாய் என்றால் அதன் மணமும், சுவையும் வேறு லெவலில் இருக்கும். பொதுவாக மோர் அல்லது தயிர் சாதம் சாப்பிடும்போது அதிகபட்சம் ஒன்னு அல்லது இரண்டு ஸ்பூன் அளவுக்கு ஊறுகாய் சாப்பிடுவோம்.
நாம கொஞ்சுண்டு சாப்பிடும் ஊறுகாயில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் இருக்கு என்பதை யோசித்து பார்ப்பதில்லை. ஆனால் சிலர் ஊறுகாய் வர்த்தகத்தை பெரிய அளவில் செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஹரியானாவை சேர்ந்த உடன்பிறப்புகள் இருவர் ஊறுகாய் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கின்றனர்.

ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்தவர்கள் நிஹாரிகா பார்கவா (சகோதரி) மற்றும் ஆதித்யா பார்கவா (சகோதரன்). இவர்கள் இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். ஆதித்யா பார்கவா கூடுதலாக லண்டனில் உள்ள காஸ் பிசினஸ் ஸ்கூலில் மார்க்கெட்டிங் மற்றும் நிர்வாகம் படித்தவர்.
தங்களது பாட்டி இறந்தபோது, குடும்பத்தில் யாரும் இனி அந்த சுவையான ஊறுகாயை செய்யபோவதில்லை என்பதை உணர்ந்தார்கள். பாட்டியின் கை பக்குவத்தில் செய்த ஊறுகாயின் சுவையை நினைத்து அதேபோன்ற சுவையான ஊறுகாய் கிடைக்குமா என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்பட்டது.
அதேசமயம் நிஹாரிகா பார்கவா நாம் ஏன் அந்த ஊறுகாயை செய்ய முயற்சி செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஊறுகாய் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் செய்முறை குறித்த விவரங்களை குடும்ப உறுப்பினர்களுடன் கேட்டு சேகரித்தார்.
தங்களது ஊறுகாய் தயாரிப்பு தொடர்பாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்த நேர்மறையாக கருத்துக்கள் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தின் ஊறுகாய் ரெசிபி மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வாய்ப்பையும் அவர்கள் கண்டனர்.
நிஹாரிகா பார்கவா மற்றும் ஆதித்யா பார்கவா முதலில் சோதனை அடிப்படையில் உழவர் சந்தையில் தங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்களை விற்பனை செய்தனர். தங்களது தயாரிப்பு குறித்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள தங்களது குடும்ப விவசாய தோட்டத்தில் உள்ள மாங்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தினர் மேலும் அவர்கள் பிரிசர்வேடிவ் இல்லாத மற்றும் அசல் தயாரிப்புகளை உறுதி செய்தனர். நிஹாரிகா பார்கவா மற்றும் ஆதித்யா பார்கவாவும் 2019ல் 20 பெண் பணியாளர்களுடன் தி லிட்டில் ஃபார்ம் என்ற ஊறுகாய் நிறுவனத்தை தொடங்கினர்.சந்தையில் அவர்களது ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து The Little Farm நிறுவனம் வளர்ச்சி காண தொடங்கியது. தற்போது பார்கவாக்களின் ஊறுகாய் விற்பனை 500 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 30,000 குடும்பங்களுக்கு ஊறுகாய் வழங்குவதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளார்கள்.
தி லிட்டில் ஃபார்ம் நிறுவனம் தனது முதன்மையான ஊறுகாய் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்கிறது. மேலும் அமேசான்,சுவிக்கி மற்றும் பிலின்கிட் போன்ற தளங்களிலும் விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications