மக்கள் தங்க நகைகள் வாங்குவதைக் குறைக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் சவரன் தங்கப் பத்திரம். அரசு சார்பாக ஆர்பிஐ வங்கி இந்த தங்கம் பத்திரத்தை வெளியிட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும், முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்டும் என்றால் அதை விற்றுவிட்டு வெளியேறலாம். எனவே இதைப் பயன்படுத்தி தங்கம் பத்திரம் திட்டத்திலிருந்து முதலீட்டை வெளியேற்றுவது சரியான முடிவா என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
தொடர் சரிவில் தங்கம் விலை.. தங்க பத்திரம் வாங்க இது சரியான நேரமா?

தங்கம் பத்திரம் திட்டத்திலிருந்து இடையில் வெளியேறுவது எப்படி?
தங்கம் பத்திரம் திட்டத்திலிருந்து இடையில் வெளியேற விரும்பும் முதலீட்டாளர்கள், பத்திரம் வாங்கிய வங்கி, பங்குச்சந்தை கணக்கு நிறுவனமும், அஞ்சல் அலுவலகம் அல்லது ஏஜன்ஸிகளை அணுக வேண்டும். குறைந்தது தங்கம் பத்திரம் வாங்கிய தேதியில் இருந்து 5 ஆண்டுக்கு ஒரு நாள் முன்னதாக அணுகி கோரிக்கை வைக்க வேண்டும். இதைச் சரியாகச் செய்யும் போது தங்கம் பத்திரம் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

எப்படி கணக்கிட்டு பணம் வழங்கப்படும்?
2016-2017 நிதியாண்டில் முதலீடு செய்து மே 17-ம் தேதி 2943 ரூபாய் கொடுத்து நீங்கள் பத்திரம் வாங்கி இருந்தால், அதை இன்று விற்கும் போது 5,115 ரூபாயாக கிடைக்கும்.

வரி உண்டா?
தங்கம் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்து முதிர்வு காலம் வரை காத்திருந்து வெளியேறும் போது கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் இடையில் வெளியேறும் போது இந்த திட்டம் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதத்தை நீண்ட கால மூலதன ஆதாய வரியாகச் செலுத்த வேண்டும்.

லாபம் என்ன?
தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தால் 8 வருடங்களில் முதிர்வடையும். ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.50 சதவீதம் வட்டி தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். தங்கம் பத்திரம் வாங்கும் போது அன்றைய தேதியில் 50 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

இப்போது விற்கலாமா?
பணவீக்கம் அதிகரிப்பு, ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் நிலையற்ற தன்மை உள்ளதால், தங்கம் பத்திரம் திட்டத்தில் முதலீட்டைத் தொடருவதே சிறந்த முடிவு என வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே இடையில் விற்கும் போது செலுத்த வேண்டிய நீண்ட கால மூலதன ஆதாய வரியையும் கணக்கில் கொண்டு முடிவு செய்வது நல்லது.