மத்திய அரசு இந்தியாவில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் , கார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நவராத்திரி தொடங்கி தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் வாகனங்கள் விற்பனை படு ஜோராக நடந்துள்ளது. 42 நாட்கள் பண்டிகை காலத்தில் இந்தியாவில் வாகன விற்பனை வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் ஒரு கார் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், ஒவ்வொரு விநாடிக்கும் மூன்று பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

பல்வேறு டீலர்களும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை டெலிவரி செய்ய முடியாமல் திணறி இருக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த பண்டிகை காலம் இந்தியாவில் வாகன விற்பனையில் பெரிய சாதனையை படைத்திருக்கிறது. இந்தியாவில் வழக்கமாகவே பண்டிகை நாட்களில் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகனங்களின் விலை குறைந்ததால் ஏராளமானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கார், பைக் உள்ளிட்டவற்றை வாங்கி இருக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டு பண்டிகை காலம் வாகன விற்பனை நிறுவனங்களுக்கு ஜாக்பாட் காலமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வெளியிடும் தகவலின் படி இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியாவில் 7 ,67,000 பேஸஞ்சர் வெஹிக்கிள் எனப்படும் பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கார்கள், வேன்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அதேபோல 40 லட்சத்துக்கு அதிகமான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

சராசரியாக ஒரு நாளைக்கு 18,261 பயணிகள் வாகனங்களும், 96,500 இருசக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டை விட 23 சதவீதம் அதிகரித்து இருக்கிறது, இருசக்கர வாகன விற்பனை 22 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் 84,000 கோடி ரூபாய்க்கு பயணிகள் வாகனங்களும் 40,500 கோடி ரூபாய்க்கு இருசக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது சராசரியாக ஒரு கார் 10 முதல் 11 லட்சம் ரூபாய்க்கும் , ஒரு இருசக்கர வாகனம் 1 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு நகர் பகுதிகளை விட கிராமப்புறங்களில் கார் விற்பனை மூன்று மடங்கும் இருசக்கர வாகன விற்பனை இரண்டு மடங்கும் உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறிய ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்தாக சொல்லப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை இந்த அக்டோபர் மாதத்தில் சந்தையில் 43 சதவீதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications