முகேஷ் அம்பானி, தோனி துவங்கி சாமானிய மக்கள் வரையில் திருப்பதி எழுமலையான் மீது பெரும் பக்தியை கொண்டுள்ளனர். வருடத்தில் ஒரு முறையாவது எழுமலையானை பார்த்துவிட வேண்டும் என்று இலக்குடன் பல கோடி மக்கள் திருப்பதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையை தளமாகக் கொண்ட சுதர்ஷன் எண்டர்பிரைசஸ் என்னம் நிறுவனம், திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சுமார் 2.5 கிலோ எடையுள்ள தங்கத்தால் ரூ.2.4 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌதரிக்கு ரங்கநாயகுள மண்டபத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் சங்கு மற்றும் சக்கர காணிக்கையாக ஒப்படைக்கப்பட்டது. திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில், TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், தங்க விலை உயர்ந்தபோதிலும் திருப்பதி கோவிலுக்கு சுமார் ரூ.773 கோடி மதிப்பிலான 1,000 கிலோ தங்கம் நன்கொடையாக வந்துள்ளது. இதன் மூலம் கோவிலின் தங்கச் சேமிப்பு 11,000 கிலோவைக் கடந்துள்ளது.
இதேபோல் கோவிலுக்கு காணிக்கையாக வந்த பணத்தை வங்கிகளில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.18,000 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வட்டி வருமானம் மட்டும் ரூ.1,200 கோடி TTD நிர்வாகத்திற்கு வருகிறது.
திருப்பதி கோவிலுக்கு தினமும் சுமார் 70,000 முதல் 1,00,000 பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் நன்கொடையாக அளிக்கப்படும் பணம், தங்கம் மற்றும் பிறவற்றின் மூலம் தினமும் ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகை திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.1,365 கோடி நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன.
சென்னை நிறுவனம் அளித்தது போல் பெரிய அளவிலான நன்கொடைகள் கோவிலுக்கு வருவது புதிதல்ல என்றாலும், சுதர்ஷன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தங்க நன்கொடை இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, விஜய் மல்லையா முதல் இன்போசிஸ் நாராயணமூர்த்தி வரையில் பலர் பல வகையில் நன்கொடையும், காணிக்கையும் செலுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications