கோயம்புத்தூர்: பங்கு வர்த்தக மோசடியில் அதிக அளவு வருமானம் கிடைக்கும் என்று கூறி மோசடி செய்து பணத்தை ஆட்டையை போடும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதற்கு சான்றாக, ஆன்லைன் வர்த்தக மோசடியில் நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த 44 வயது தனியார் பள்ளி ஆசிரியர் ரூ. 28.55 லட்சத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதைப் பார்ப்போம்.
ரேகா (பெயர்மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) என்னும் பள்ளி ஆசிரியர் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடிக்கு சமீபத்தில் இரையாகியுள்ளார். அவரது சோசியல் மீடியா பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தில் ஆரம்பித்தது தான் இந்த மோசடி கதை. முதலில் அந்த விளம்பரத்தில் உள்ளது போல் ஒரு டிரேடிங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுமாறு அவருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு முதலில் சில தொகை வருமானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் உண்மையில் உண்மைதான் என்று நம்பிய ரேகா மே 15ஆம் தேதி வரை அந்த செயலியில் படிப்படியாக ரூபாய் ரூ. 28.55 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.

அதுவரையில் தனக்கு திரும்பவும் வருமானம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணத்தை அனுப்பி கொண்டே இருந்துள்ளார் ரேகா. ஆனால் அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் வருமானம் வருவது நின்று போனது. அதன் பிறகு தான் ரேகாவுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் நகர குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்று இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது IPC பிரிவுகள் 419 மற்றும் 420 மற்றும் IT சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், ஆன்லைன் மோசடி செய்பவர்கள் குறித்து மக்களை எச்சரித்த போலீசார், அவர்களின் வங்கி விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
ஆதார் மோசடிகள், ஆர்மி ஆபீஸர் போல நடித்து மோசடி செய்வது, கொரியர் வந்ததாகக் கூறி மோசடி செய்வது, ஸ்டாக் மார்க்கெட் முதலீடு செய்வதாக கூறி மோசடி செய்வது என்று பல புது புது ஐடியாக்களை வைத்து தான் தற்போது மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் இதில் வேதனை என்னவென்றால் இதில் ஏமாறும் மக்கள் அனைவரும் பங்குச்சந்தை பற்றிய அறிவை பெற்றவர்கள் என்று சமீபத்தில் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.
பேராசை பெருநஷ்டம் என்பதற்கு ஏற்ப பலரும் தங்களின் முதலீடு இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையில் ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் சிக்கி அதிக அளவிலான தொகையை தொடர்ந்து இழந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications