சென்னை: ஹிமாச்சல பிரதேசத்தில் கனத்த மழை பெய்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அம்மாநிலத்தின் முக்கிய விளைபொருட்களின் சப்ளை தடைபெற்று காய்கறி சந்தைகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய தகவல் அமைச்சகத்தின் நுகர்வோர் நலன் துறையின், விலை கண்காணிப்பு பிரிவு தகவல்படி, கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த தக்காளியின் சராசரி விலை, ஜூலை 3ஆம் தேதி ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. இது விரைவில் 80 ரூபாய் வரையில் உயரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

வட இந்தியாவில் தக்காளி வரத்து குறைந்தால் அதிக விலை கிடைக்கும் என்பதால் வர்த்தகர்கள் தென்னிந்தியாவில் விளையும் தக்காளியை வட இந்தியாவுக்கு அனுப்புவது வழக்கம். இதன் எதிரிலியாகத் தென்னிந்தியாவிலும் சப்ளை குறைந்து விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும்.
ஆசாத்பூர் மண்டி எனும் மொத்த விற்பனை சந்தையில் காய்கறி வியாபாரியாக இருக்கும் மனோஜ் குமார் கூறுகையில், "ஹிமாச்சல பிரதேசத்தில் கனத்த மழை பெய்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தக்காளி வருகை குறைந்துள்ளது. இதனால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல்படி, வட இந்தியாவிற்கு முக்கிய தக்காளி சப்ளை விளைவிக்கும் இடமாக இருக்கும் ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு தக்காளி உற்பத்தி பகுதிகளில் ஜூலை 7ஆம் தேதி வரை கனத்த மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை மேலும் உயரக்கூடும்.
கடந்த ஆண்டும் இதேபோல் கனத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகத் தக்காளி விலை கிலோ ரூ.350 ஐ தாண்டியது நினைவிருக்கும். தரமான தக்காளி கிடைப்பதில் சிக்கல் இருந்ததால், வட இந்தியாவில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் தற்காலிகமாகத் தக்காளி சேர்க்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொதுவாக மழைக்காலங்களில் காய்கறி விலைகள் அதிகரிப்பது வழக்கம். மழை காரணமாகக் காய்கறிகளை அறுவடை செய்வதிலும், பேக்கிங் செய்வதிலும் சிக்கல் ஏற்படுவதுடன், போக்குவரத்தின் போது காய்கறிகள் வீணாவதும் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகிறது.


Click it and Unblock the Notifications