2025-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கக் கட்டணம் குறைந்தது. அப்போது தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்து காணப்பட்டது. ஆனால் அதிலிருந்து சில மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ஏறத் தொடங்கியது. இன்று வரை தொடர்ந்து ஏறி வருகிறது.
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025-ஆம் ஆண்டில் இதுவரையில் இல்லாத வகையில் தங்கத்தின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50 சதவீதமும், கடந்த மூன்று ஆண்டுகளில் 100 சதவீதமும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை அன்று டாலரின் மதிப்பு சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியை சீரமைக்கும் விதமாக சில திட்டத்தை அறிவித்தார். பொதுவாக அமெரிக்க மத்திய வங்கியில் வட்டி குறைக்கப்பட்டால் முதலீடாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி முதலீடு செய்வார்கள். அதன்போதும் தங்கம் விலை உயரும்.
இப்படி பல்வேறு காரணங்களினால் தங்கத்தின் விலை 3400 டாலர்களைத் தாண்டி விற்பனையானது. இந்தியாவில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்துதான் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். முதன் முறையாக இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது.
வேர்ல்ட் கோல்டு கவுன்சில் வெளியிட்ட தகவல்களின்படி, 2024-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உலக நாடுகளில் இயங்கி வரும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டின. இதனால் அந்த குறிப்பிட்ட காலாண்டில் மட்டும் 333 டன் தங்கத்தை உலக நாடுகள் வாங்கியுள்ளன. இதனால் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 1,000 டன்னை தாண்டி தங்கத்தின் கொள்முதல் அதிகரித்துள்ளது.
பல உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துள்ளன. சர்வதேச வணிகத்திற்கு இந்த தங்கக் கையிருப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு நாடு எவ்வளவு தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறதோ? அந்த அளவுக்கு அந்த நாட்டின் கடன் தகுதி நிர்ணயிக்கப்படும். கையிருப்பில் தங்கம் இருந்தால் அந்தக் குறிப்பிட்ட நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது தங்கத்தை பயன்படுத்தி தங்கள் பொருளாதார நிலையை நிலை நிறுத்த முடியும்.
வேர்ல்ட் கோல்டு கவுன்சில் வெளியிட்ட தகவல்களின்படி அமெரிக்கா தான் அதிக அளவில் தங்க இருப்பை வைத்துள்ளது. மொத்தமாக அமெரிக்காவில் உள்ள தங்கத்தின் எடை 8,133.46 டன்கள். இதன் மதிப்பு தோராயமாக 682,276.85 மில்லியன் ஆகும். அடுத்து 3 இடங்களில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் இந்த மூன்று நாட்டின் மொத்த கையிருப்பும் அமெரிக்காவின் கையிருப்பும் கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது.
2024 ஆம் ஆண்டில் போலந்து 89.54 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதனால் மொத்தமாக தங்கக் கையிருப்பை வைத்திருக்கும் நாடுகளில் போலந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2024-2025-ஆம் ஆண்டில் அதிக தங்க இருப்பு கொண்ட முதல் 10 நாடுகள்:
| தரவரிசை | நாடு | தங்க இருப்பு (டன்கள்) |
|---|---|---|
| 1 | அமெரிக்கா | 8,133.46 |
| 2 | ஜெர்மனி | 3,351.53 |
| 3 | இத்தாலி | 2,451.84 |
| 4 | பிரான்ஸ் | 2,437.00 |
| 5 | சீனா | 2,279.56 |
| 6 | சுவிட்சர்லாந்து | 1,039.94 |
| 7 | இந்தியா | 876.18 |
| 8 | ஜப்பான் | 845.97 |
| 9 | நெதர்லாந்து | 612.45 |
| 10 | போலந்து | 448.23 |


Click it and Unblock the Notifications