விவசாயிகள் அஸ்வகந்தா, ஜெரணியம், குல்கைரா, லெமன்க்ராஸ், சதாவரி ஆகிய மருத்துவ செடிகளை சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த செலவில் நல்ல வருமானம் ஈட்டலாம்.
விவசாயிகள் பெரும்பாலும் நெல், வாழை போன்ற பாரம்பரியமாக சாகுபடி செய்து வரும் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். மருத்துவ செடிகளை சாகுபடி செய்தும் நல்ல வருமானம் ஈட்டலாம். விஷயம் அறிந்த விவசாயிகள் மூலிகை தோட்டங்கள் போன்றவை அமைத்து நல்ல காசு பார்த்து வருகின்றனர்.

இயற்கை மற்றும் தனித்துவமான மருத்துவ செடிகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. மருந்து, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துத் துறைகளுக்கு இந்த செடிகள் மூலப்பொருட்களாக சப்ளை செய்யப்படுகின்றன. எனவே மருத்துவ தாவரங்களுக்கு நல்ல தேவை இருக்கிறது ஆகையால் இவற்றை சாகுபடி செய்தால் நல்ல ஆதாயம் பெற முடியும்.
மருத்துவ செடிகளுக்கான தேவை மற்றும் நல்ல வருமானம் ஆகியவை விவசாயிகளை மருத்துவ செடிகள் சாகுபடி பக்கம் ஈர்த்து வருகிறது. மருத்துவ செடிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தேசிய மருத்துவ தாவர வாரியம், சாகுபடிக்கு பல்வேறு தாவர இனங்களின் அடிப்படையில் 30, 50 மற்றும் 75 சதவீதம் மானியம் வழங்குகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் டாப் 5 மருத்துவ செடிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அஸ்வகந்தா: ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் அஸ்வகந்தா செடியின் வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அஸ்வகந்தா விதைத்த 150-180 நாட்களுக்கு பிறகு அதன் வேர்களுக்காக பயிர் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் அஸ்வகந்தா சாகுபடி செய்ய தோராயமாக ரூ.12-14 ஆயிரம் செலவாகும். ஆனால் விளைபொருள் தோராயமாக ரூ.60-70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
குல்கைரா: குல்கைரா சாகுபடி லாபகரமான வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. வழக்கமான பயிர்களுக்கு மத்தியில் குல்கைராவை விதைத்து, அறுவடை செய்து நல்ல லாபம் ஈட்டலாம். குல்கைரா பூக்கள், இலைகள், தண்டுகள் மற்றும் விதைகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். ஒரு பிகா நிலத்தில் குல்கைரா பயிரிடுவதன் மூலம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.
லெமன்க்ராஸ்: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பினால் அதற்கு சரியானது லெமன்க்ராஸ். இது நான்கு மாதங்களில் வளர்ந்து விடும். ஒரு ஹெக்டேரில் லெமன்க்ராஸ் சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவே செலவாகும். ஆண்டுக்கு ரூ.4-5 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். அழகு சாதன பொருட்கள், சோப்புகள், எண்ணெய்கள் மற்றும் மருந்துகள் உள்பட பல்வேறு தொழில்களில் லெமன்க்ராஸ் எண்ணெய்க்கு மிகப்பெரிய தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சதாவரி: சதாவரி ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த செடியின் உலர்ந்த வேர்கள் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஒரு ஏக்கர் நிலத்தில் சதாவரி சாகுபடி செய்தால் ரூ.6 லட்சம் வருவாய் ஈட்டலாம்.
ஜெரணியம்: குறைந்த செலவு அதிக லாபம் என்பதுதான் ஜெரணியம் செடி சாகுபடியின் சிறப்பு. மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும். பூக்கும் ஜெரணியம் செடியிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது நறுமண சிகிச்சை, அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை சோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜெரணியம் எண்ணெய்யின் சந்தை விலை (ஒரு லிட்டர்) ரூ.20 ஆயிரம் வரை உயரக்கூடும்.


Click it and Unblock the Notifications