துருக்கி: இந்தியா பாகிஸ்தான இடையிலான மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வதை நிறுத்திக் கொண்டனர் இதன் காரணமாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக துருக்கி நாட்டு துருக்கி ஏர்லைன்ஸின் பங்கு மதிப்பு ஒரே மாதத்தில் 10% வரை சரிவடைந்திருக்கிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கிறோம் என அறிவித்தது. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்ததை அடுத்து இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் துருக்கிக்கு தாங்கள் போட்டு இருந்த சுற்றுலாத் திட்டங்களை ரத்து செய்தனர்.

கோடை விடுமுறை காலத்தில் துருக்கி நாட்டிற்கு செல்வதற்காக முன்கூட்டியே செய்திருந்த விமான டிக்கெட் மற்றும் தங்கும் இடத்திற்கான பதிவுகளை பெரும்பாலான இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். மேக் மை டிரிப் தளம் வாயிலாக துருக்கி நாட்டிற்கு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது 60 சதவீதம் குறைந்திருப்பதாகவும் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவது 250 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈஸ் மை ட்ரிப் தளத்தின் தலைவரான நிஷாந்த் பெட்டி 2022 ஆம் ஆண்டில் 2.3 லட்சம் இந்தியர்கள் துருக்கிக்கு சுற்றுலா சென்றனர் என்றும் 2023 ஆம் ஆண்டில் இது 2.87 லட்சமாக அதிகரித்தது என்றும் கூறுகிறார். துருக்கிக்கு சுற்றுலா செல்லக்கூடிய ஒவ்வொரு தனிநபரும் தலா 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள் இதன் மூலம் அந்நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பட்டு இருக்கிறது என கூறுகிறார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் துருக்கி நாட்டிற்கு மூன்றாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது என தெரிவிக்கிறார். இந்த ஆண்டு துருக்கியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக பெரும்பாலான இந்தியர்கள் தங்களுடைய சுற்றுலா திட்டங்களை ரத்து செய்துவிட்டனர். இது துருக்கி நாட்டு சுற்றுலாத் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி தந்துள்ளது குறிப்பாக துருக்கி நாட்டுக்கு சொந்தமான துருக்கி ஏர்லைன்ஸ் பங்கு மதிப்பு கடந்த ஒரு மாத காலத்திலேயே சுமார் 10% வரை சரிவடைந்து இருக்கிறது.
அந்நாட்டு கரன்சியான லிராவின் மதிப்பு படி கடந்த மாதம் இதே காலகட்டத்தில் துருக்கி ஏர்லைன்சின் ஒரு பங்கு மதிப்பு 312.75 லிராக்களாக இருந்து தற்போது 279 லிராக்களாக குறைந்து இருக்கிறது. பல்வேறு இந்திய சுற்றுலாப் பயணிகளும் தங்களுடைய துருக்கிக்கான பயண டிக்கெட்டுகளை ரத்து செய்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications