இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டிவிஎஸ் குழுமத்தில் சொத்து பிரச்சினை பூதாகரமாகி இருக்கிறது. டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு சொத்து கேட்டு தனது தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக என்டிடிவி (NDTV) செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது தான் டிவிஎஸ் குழுமம். இதன் கீழ் இருசக்கர வாகனம், வாகன உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஃபேஷன், பைனான்ஸ், இன்சூரன்ஸ் என பல துறை சார்ந்த நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகன் மற்றும் மகளுக்கு இடையே தான் சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் வேணு சீனிவாசனின் மகளான லட்சுமி வேணு, சொத்து பிரிவினை கோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம். டிவிஎஸ் குழுமத்தில் வேணு சீனிவாசனுக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் வணிக சொத்துகளில் தனக்கு சமமான சட்டப்பூர்வ பங்கை வழங்குமாறு , தன் தந்தை வேணு சீனிவாசனுக்கு லட்சுமி வேணு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்து வாரிசு உரிமை சட்டம் தந்தையின் சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு இருக்கிறது என கூறுகிறது. இந்த சட்டத்தின் கீழ் தமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டவும், குடும்ப சொத்துகளை நியாயமான முறையில் பிரித்து கொடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பாரம்பரியமிக்க டிவிஎஸ் குழுமத்தில் வேணு சீனிவாசன் குடும்பத்தில் சொத்து பகிர்வு மற்றும் வாரிசுரிமை தொடர்பான பிரச்சினை எழுந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது லட்சுமி வேணு அதிகாரப்பூர்வமாகவே நோட்டீஸும் அனுப்பியுள்ளார். மகன் சுதர்சன் வேணுவுக்கு சாதகமாக நிறுவன மேலாண்மை பொறுப்புகளை தந்தை தரப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் லட்சுமி வேணுவின் நோட்டீஸ் அமைந்துள்ளது.
குடும்பத்தின் தலைவராக உள்ள தனது தந்தை வேணு சீனிவாசன் சொத்துகளை சட்டப்பூர்வமாக பிரித்து தர வேண்டும் என அவர் கோரியுள்ளார். லட்சுமி வேணுவின் சொத்து பிரிப்பு கோரிக்கைக்கு தாய் மல்லிகா சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒரு தாயாக தனக்கு மகனும் மகளும் அனைத்து வகையிலும் சமம் என்றும், சுதர்சன் வேணுவுக்கு வழங்கப்பட்டதை போலவே லட்சுமி வேணுவுக்கும் குடும்ப சொத்தில் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்றும் மல்லிகா சீனிவாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என என்டிடிவி செய்தி கூறுகிறது. மேலும், இது வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனரான டி.வி. சுந்தரம் ஐயங்காரின் வாரிசுகளுக்கு இடையே ஒட்டுமொத்த குடும்ப சொத்துகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், வேணு சீனிவாசனின் நேரடி குடும்பத்திற்குள் இதுவரை எந்தவிதமான முறையான சொத்து பகிர்வும் தொடங்கப்படவோ அல்லது முடிக்கப்படவோ இல்லை என லட்சுமி வேணு சுட்டிக்காட்டியுள்ளார்.
டிவிஎஸ் குழும வாரிசுகள் மத்தியில் சொத்து பிரிப்பு பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும், டிவிஎஸ் குழும நிறுவனங்களின் தினசரி வணிக செயல்பாடுகள், நிர்வாக இயக்கங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், அவை வழக்கம்போல தங்குதடையின்றி இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications

