இந்தியாவில் தங்க நகை இறக்குமதி சமீப காலங்களில் அதிகரித்து வரும் வேளையில், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான ப்ரீ டிரேட் ஒப்பந்தத்தின் (FTA) கீழ் இறக்குமதி செய்யப்படும் நகைகள் தவிர, தங்க நகைகள் மற்றும் அவற்றின் பாகங்கள் இறக்குமதி செய்வது உடனடியாக தடை (அனுமதி பெற்ற பின்பே இறக்குமதி) செய்யப்பட்டு உள்ளது. வெளிநாட்டு வர்த்தக துறை (DGFT) வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கக் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் புலனாய்வு அமைப்புகள், குறைந்த வளர்ந்த நாடுகள் (LDC) மற்றும் இந்தியா ப்ரீ டிரேட் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் இருந்து வரும் தங்க நகை இறக்குமதியின் அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன.
இந்த நாடுகளில் இருக்கும் குறைந்த வரி விதிப்பு வசதியைப் பயன்படுத்தி இறக்குமதியாளர்கள் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்வதால் மத்திய அரசு இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது குறைவான விலையில் தங்கம் பெற முடியும் என்பதே இதற்கு முக்கியமான காரணம்.
இந்த நிலையில் ஹார்மோனைஸ்டு சிஸ்டம் ஆஃப் நோமென் கிளாசிஃபிகேஷன் (HSN) குறியீடுகளின் கீழ் வரும் ஐந்து தங்க நகை இறக்குமதி முற்றிலும் தடை செய்யப்படவில்லை என்றும், இறக்குமதியில் திடீர் அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து, நகைகள் இறக்குமதி செய்யப்படும் பகுதிகளை சிறப்பாக கண்காணிப்பதற்காகவே அனுமதி பெற்று இறக்குமதி செய்யும் கட்டமைப்பு கொண்டு வரப்பட்டு உள்ளது என அரசு அதிகாரி தெரிவித்தார்.
2022-2023 நிதியாண்டில் 52 மில்லியன் டாலராக இருந்த தங்க நகை பாகங்கள் இறக்குமதி, 2023-2024 நிதிய ஆண்டில் இந்த இறக்குமதி 30 மடங்கு அதிகரித்து 1,551 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாகவே தற்போது இந்த பிரிவு கட்டுப்படுத்தப்பட்ட பிரிவாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் வைரங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட நகைகளும் இந்த இறக்குமதி கட்டுப்பாட்டிற்குக் கீழ் வருகிறது.
தற்போது தடை செய்யப்பட்ட நகை பிரிவுகளின் HSN code பட்டியல், 71131912, 71131913, 71131914, 71131915, 71131960 ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications