கான்பூர்: உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஒரு தம்பதி இளமையை மீட்டு தருவதாக கூறி 35 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ரஷ்மி ஆகிய இருவரும் வயதை குறைத்து இளமையான தோற்றத்தை கொண்டு வருவதாக கூறி பலரிடம் இருந்து 35 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
ராஜிவ் துபே மற்றும் ரஷ்மி தம்பதியினர் இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட ஒரு டைம் மெஷினை கொண்டு உங்களை 25 வயது இளமை கொண்ட நபராக மாற்றி விடுவோம் என விளம்பரம் செய்துள்ளனர். அதாவது இந்த அதிசயமான டைம் மெஷினுக்குள் நீங்கள் சென்றுவிட்டால் அது ஒரு வித ஆக்சிஜன் தெரபியை உங்களுக்கு வழங்கும். எனவே உங்களது இளமை மீட்டெடுக்கப்படும் நீங்கள் வயது குறைந்து இளமையான தோற்றம் பெறுவீர்கள் என கூறியுள்ளனர்.

ரிவைவல் வேல்ர்ட் எனும் பெயரில் ஒரு தெரபி சென்டரை நடத்தியுள்ளனர். கான்பூரில் மாசுபாடு அதிகரித்து இருப்பதால் மக்கள் சீக்கிரம் வயது முதிர்வு அடைந்து விடுவதாகவும் இதனை தடுப்பதற்கு இஸ்ரேலில் இருந்து ஒரு பிரத்தியேக இயந்திரத்தை இறக்குமதி செய்ய இருப்பதாகவும் இந்த தம்பதியினர் அந்த பகுதியை சுற்றி இருந்தவர்களிடம் விளம்பரம் செய்துள்ளனர். இந்த டைம் மெஷின் மூலம் ஆக்ஸிஜன் தெரபி செய்தால் இளமையான தோற்றம் கிடைத்துவிடும் எனக் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஆக்ஸிஜன் தெரபி செய்ய விண்ணப்பம் செய்பவர்கள் நண்பர்களை பரிந்துரை செய்தால் அதற்கு பிரத்தியேகமாக தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியுள்ளனர். தெரபிக்கும், சந்தாவுக்கும் 90 ஆயிரம் ரூபாய் என்ற ஒரு பேக்கேஜையும் இவர்கள் விளம்பரம் செய்து பலரிடம் பணம் பறித்துள்ளனர். இஸ்ரேலில் இருந்து டைம் மெஷினை கூடிய விரைவில் இறக்குமதி செய்ய போகிறோம் என அறிவித்துள்ளனர்.
ஆனால் அவ்வாறு எந்த டைம் மெஷினையும் அவர்கள் இறக்குமதி செய்யவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கான்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த தம்பதி ஏராளமானவர்களிடம் ஆசை வார்த்தை கூறி 35 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த தம்பதியினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இவர்கள் வெளிநாடு தப்பி செல்லாத வகையில் விமான நிலையங்களில் அலர்ட் செய்திருப்பதாக கூறியுள்ளனர். இது போல இயற்கைக்கு மாறான எந்த ஒரு உத்தரவாதத்தையும் நம்பி பணம் செலுத்தி மோசம் போகாதீர்கள் என மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications