சென்னை: டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்று ரிசர்வ் வங்கி (RBI), கடந்த வியாழன் அன்று வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது 2024ஆம் நிதி ஆண்டில், 14.57 பில்லியன் ரூபாய் ($ 175 மில்லியன் டாலர்) என்ற அளவை எட்டியுள்ளது. அதாவது இந்திய ரூபாயில் சுமார் ரூ. 1,457 கோடியாகும். இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டுகளை விட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆர்பிஐ தரவுகளின்படி, UPI பரிவர்த்தனைகள் கடந்த 2 ஆண்டுகளில் 137 சதவீதம் அதிகரித்து, அதிர்ச்சியூட்டும் வகையில் ரூ. 200 ட்ரில்லியன் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

முன்பு போல் இல்லாமல் தற்போது இன்டர்நெட் வசதியும் அதிகரித்துவிட்டது. இதனால் நாடு முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட்களின் பயன்பாடு அதிகரித்தன. வங்கிக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்வதை வீட்டிலிருந்து செய்யும் வசதியை UPI சேவைகள் வழங்கினாலும், மோசடி செய்பவர்களின் கவனத்தையும் சேர்த்து ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தெரியாத நபர்களிடமிருந்து UPI பின் நம்பர்களை கேட்டு பெறுவது, பிஷ்ஷிங் லிங்குகளை அனுப்பி கொள்ளையடிப்பது என்று எத்தனையோ ட்ரிக்குகளைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றனர்.
இதன் காரணமாகவே இந்தியாவில் பணப்பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் அதிகரித்துள்ளன. தற்போது அதன் விளைவாக சுமார் ரூ. 1,457 கோடி ரூபாய் மோசடிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், மோசடிகள் தொடர்ந்து நடப்பதைக் கருத்தில் கொண்டு, நிதி மோசடி அபாயங்கள் குறித்து பயனர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக ரிசர்வ் வங்கி பல விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரங்களில், பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் போன்ற பிரபலமான நபர்கள் இடம்பெற்று, ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கின்றனர்.
இந்தியாவில் 2024ஆம் நிதி ஆண்டில் மட்டும் கார்டு மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களின் மூலம் நடந்த மோசடிகளின் விகிதம் 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2023ஆம் நிதி ஆண்டில் 1.1 சதவீதமாக இருந்ததிலிருந்து அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. என்னதான் பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டாலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் மூலம் நடக்கும் அபாயங்களை எதிர்த்து போராடுவதற்கு இன்னும் விழிப்புணர்வு தேவை என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
சமீபகாலமாக நடந்து வரும் மோசடி சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அனைவரும் விழிப்புணர்வோடு செயல்படும்போது மட்டுமே, இது போன்ற மோசடிகளில் இருந்து விடுபட முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது .ஒவ்வொரு முறையும் உங்களுடைய தனிப்பட்ட வங்கி விவரங்கள், பின் நம்பர், கார்டு நம்பர், மொபைல் OTP போன்றவற்றை பிறருடன் பகிரும்போது, உங்கள் பணத்தை திருடுவதற்கு நீங்களே வழிவகுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications