ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகிறது. இதில் ஒரு சில திருமணங்கள் மட்டும் உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகின்றன. ஒன்று திருமண ஜோடிகள் பிரபலமானவர்கள் இருப்பார்கள் அல்லது அந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்திருக்க வேண்டும் இதுதான் அதற்கு காரணம்.
இதில் இரண்டாவது வகையை சேர்ந்தது அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் திருமணம். இவர்கள் பிரபலமான ஜோடி அல்ல இருப்பினும் அவர்கள் திருமணம் ஆன்லைனில் அதிக கவனத்தை ஈர்த்தது. இவர்களது திருமணத்தை இந்த நூற்றாண்டின் திருமணம் என்று குறிப்பிடுகிறார்கள்.

மணப்பெண்ணான மெடலைன் ப்ரோக்வே அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த தொழில்முனைவோர். இவரது குடும்பம் நல்ல செல்வ செழிப்புமிக்கது. மணப்பெண்ணின் தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே, பில் உஸ்லேரி மோட்டார்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்நிறுவனம் புளோரிடாவின் கோரல் கேபிள்ஸ் மற்றும் கட்லர் பே ஆகிய இடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் டீலர் ஷிப்களை நடத்தி வருகிறது. ராபர்ட் பாட் ப்ரோக்வே தனது மகள் மெடலைன் ப்ரோக்வே திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த விரும்பினார்.

இதனையடுத்து பாரிஸில் மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் ஜோடியின் திருமணத்தை நடத்த முடிவு செய்தார். பாரீஸில் உள்ள புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையின் ஒரு பகுதியை மகளின் திருமணத்துக்காக வாடகைக்கு எடுத்தார்.
திருமணம் நடைபெற்ற அரண்மனை பகுதியை விதவிதமான மலர்களால் அலங்கரித்தது, விருந்தினர்களை தனிப்பட்ட விமானங்களில் பாரிஸூக்கு அழைத்து வந்தது, பிரபல இசைக்குழுவான மரூன் 5-ன் இசை நிகழ்ச்சியை நடத்தியது உள்பட திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தியது.
ஒரு வாரம் நடைபெற்ற தனது திருமண கொண்டாட்டங்களின் போது, மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் ஜோடி கண்களை கவரும் வகையில் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தனர். இந்த திருமண விழாவின் வீடியோக்கள் மற்றும் படங்கள் டிக் டாக்கில் வைரலானது. இதனை பார்த்த பார்வையாளர்கள் வியந்தனர்.
சிலர் திருமண செலவுகள் குறித்து ஆச்சரியமடைந்தனர். கடந்த 18ம் தேதியன்று ரூ.491 கோடி செலவில் மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் ஜோடி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications