அமெரிக்க அரசின் வர்த்தக துறை வெளியிட்டுள்ள தரவுகள் படி அந்நாட்டின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 2.8% விகிதத்தில் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி முந்தைய காலாண்டில் இருந்து சிறிய அளவில் குறைந்திருந்தாலும், தொடர்ந்து வலுவான நிலையிலேயே உள்ளதாக கூறியுள்ளது அமெரிக்க அரசின் வர்த்தக துறை.
செப்டம்பர் காலாண்டில் பதிவான ஜிடிபி வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளது. இதில் முக்கியமான காரணமாக கூறப்படுவது இக்காலாண்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றால் மக்கள் செலவு செய்வது அதிகரித்து அந்நாட்டின் நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் வலுவடைந்துள்ளது, கூடுதலாக அமெரிக்க நாட்டின் ஏற்றுமதி அதிகரித்ததும் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையும் வலுவான நிலையிலேயே உள்ளதாக அமெரிக்க அரசின் வர்த்தக துறை இன்று மாலை இந்திய நேரப்படி 7 மணியளவில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முடிவில் அதாவது நவம்பர் 23ஆம் தேதி நிலவரப்படி வேலையின்மை காப்பீடு கோரும் நபர்களின் எண்ணிக்கை 2,000 குறைந்து 213,000 ஆக குறைந்துள்ளது.
இது வேலைவாய்ப்பு சந்தையில் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாகி வருவதை காட்டுகிறது. இருப்பினும், நீண்ட கால வேலையின்மை காப்பீடு கோரும் நபர்களின் எண்ணிக்கை 9,000 அதிகரித்து 1.907 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது வேலைவாய்ப்பு சந்தையில் நிச்சயமற்ற நிலை இருப்பதையும் காட்டுகிறது.
மொத்தத்தில், அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டாலும், வலுவான நிலையிலேயே உள்ளது என்பதை இன்று வெளியான தரவுகள் அடிப்படையில் காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை, டாலர் மதிப்பு ஆகியவை எப்படி இருக்கிறது என்பது அடிப்படையில் தான் வியாழக்கிழமை இந்திய ரீடைல் சந்தையில் விலை நிலவரம் எதிரொலிக்கும்.
தங்கம் விலை: அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளியான பின்பு சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு மணிநேரத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2657 டாலரில் இருந்து 2650 டாலராக குறைந்துள்ளது.
டாலர் மதிப்பு: சர்வதேச நாணய சந்தையில் டாலர் மதிப்பீட்டை அளவீடும் DXY குறியீடு 0.80 சதவீதம் குறைந்து 106.16 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த ஒரு மணிநேர வர்த்தகத்தில் சிறிய அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications