இந்தியாவை சேர்ந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினால் உலகிலேயே மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக இந்தியா மாறும் என வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் என குறைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் தங்க நகைகளின் விலை கணிசமான அளவு குறைந்து வருகிறது.
பட்ஜெட் அறிவிப்பை அடுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இந்தியா பெருமளவில் தங்கத்திற்காக வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இந்தியாவிலேயே தங்கம் உற்பத்திக்கான சிறந்த திறமைகளும், மூலங்களும் இருக்கின்றன, அதனை நாம் சரியாக பயன்படுத்தினால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் தங்கம் உற்பத்தியில் இந்தியா ஒரு முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என கூறியுள்ளார்.

நமக்கு தேவையான தங்கத்தில் கிட்டத்தட்ட 99. 9% நாம் இறக்குமதி செய்கிறோம் ,ஆனால் இந்த மாற்றம் செய்தால் தங்கம் உற்பத்தியில் இந்தியா முதன்மை நாடாகவும் அதன் மூலம் பல மிகப்பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என கூறியுள்ளார்.
இதன்படி இந்தியாவில் இருக்கக்கூடிய இரண்டு தங்க உற்பத்தியாளர்களான பாரத் கோல்டு மைன் மற்றும் ஹட்டி கோல்ட் மைன் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு தனியார்மயமாக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.

ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இருக்காது, ஊழியர்களுக்கு சில பங்குகள் வழங்கப்படும் மற்றும் சொத்துக்களை பகுதிகளாக பிரிக்காமல் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இதனை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். 2023-24 ஆம் நிதி ஆண்டில்ப் இந்தியாவில் தங்கம் இறக்குமதி 30 சதவீதம் அதிகரித்து 45.54 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதற்கு காரணம் உள்நாட்டில் தங்கத்தின் தேவை மிக வலுவாக இருந்தது.
தங்க சுரங்கங்களை போல செப்பு சுரங்கங்களிலும் மாற்றம் செய்யலாம் என யோசனை கூறியுள்ளார். இந்தியாவில் ஒரே ஒரு செப்பு சுரங்க நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. அரசு இந்த நிறுவனத்தில் தனது பங்குகளை விற்க வேண்டும் என்ற பரிந்துரையையும் அகர்வால் முன்வைத்துள்ளார்.
தங்கம் மற்றும் செப்பு இறக்குமதியில் 10 சதவிகிதம் குறைந்தால் கூட அது நமக்கு அன்னிய செலாவணியில் 6.5 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 3500 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் இதனை கொண்டு 25,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மத்திய சுரங்க அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் செப்பு எடுப்பதற்கான அனைத்து சுரங்க குத்தகைகளையும் இதன் மூலம் மட்டுமே பெற முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications