இந்திய குடும்பங்களை காய்கறி விலை உயர்வு கடுமையாகப் பாதித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் கிட்டத்தட்ட பாதி பேர் தக்காளியை கிலோவிற்கு ரூ. 75 க்கும் மேல், வெங்காயத்தை கிலோவிற்கு ரூ. 50 க்கும் மேல் மற்றும் உருளைக்கிழங்கைக் கிலோவிற்கு ரூ. 40 க்கும் மேல் செலவழிப்பதாக தெரிவித்துள்ளனர்.
காய்கறி விலை உயர்ந்த காரணத்தால் மக்கள் எங்கு விலை குறைவாக இருக்கிறதோ, அங்கு சிறிய அளவில் மட்டும் வாங்கி வருகின்றனர். இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் கிட்டத்தட்ட 29% பேர் இதை செய்து வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும், தினமும் அசைவம் சாப்பிடுவோர் மிகவும் குறைவு என்பதால், காய்கறிகள் மக்களின் உணவு முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படியிருக்கையில் காய்கறி விலை உயர்வு அதிகப்படியான மக்களை நேரடியாக பாதிக்கிறது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கனமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காய்கறி விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சப்ளை செயினில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றுக்கான காய்கறி விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இதேவேளையில் சந்தையில் ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற மாமிச வகைகள் பெரிய அளவில் உயரவில்லை.
இதன் எதிரொலியாக வீட்டில் தயாரிக்கப்படும் சைவ தாலியின் அதாவது சைவ மீல்ஸ் ஒட்டுமொத்த செலவு செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் சுமார் 11% அதிகரித்ததுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் காய்கறி விலை உயர்வு மட்டுமே. அசைவ உணவுகளிலும் தக்காளி, வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கும் காரணத்தால் அசைவ தாலியும் உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் தக்காளியின் விலை 53%, உருளைக்கிழங்கின் விலை 50% மற்றும் வெங்காயத்தின் விலை 18% ஆக உயர்ந்ததால் சைவ உணவின் விலை அதிகரித்ததாகக் கிரிசில் அறிக்கை கூறுகிறது.
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வில் இந்தியாவின் 351 மாவட்டங்களில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பதில்களைத் திரட்டப்பட்டு உள்ளது. இதில் பதிலளித்தவர்களில் 63% ஆண்களும், 37% பெண்களும் இருந்தனர். 40% பதிலளித்தவர்கள் டையர் 1 நகரங்களிலிருந்தும், 7% டையர் 2 மற்றும் 33% பதிலளித்தவர்கள் டையர் 3 நகரங்களிலிருந்தும் இருந்து பதில் அளித்துள்ளனர்.
நாட்டின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதத்தை எட்டி, 9 மாத உச்சத்தை அடைந்தது. இது டிசம்பர் 2023 இல் 5.69% இருந்தபோது மிக உயர்ந்த சில்லறை விலைவாசி விகிதமாகும். ஆகஸ்ட் மாதம் இது 3.65% ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications